உலக செய்திகள்

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி; அமெரிக்கா

ஈரான் மீது இஸ்ரேல் , அமெரிக்கா இணைந்து கடந்த 28ம் தேதி கூட்டு தாக்குதல் நடத்தியது.

வாஷிங்டன்,

ஈரான் மீது இஸ்ரேல் , அமெரிக்கா இணைந்து கடந்த 28ம் தேதி கூட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், மத்திய கிழக்கில் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா ஏற்கனவே குறைத்துக்கொண்டது. குறிப்பாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தது.

இதையடுத்து, அமெரிக்கா - இந்தியா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ள இந்தியா ஒப்புகொண்டது. இதனால், இந்தியாவுக்கு விதித்த வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

இந்நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம், ஹோர்முஸ் நீரிணை மூடல் காரணமாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது. நமது நட்பு நாடான இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதி அளித்துள்ளோம் என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கூறுவதை இந்தியா அமல்படுத்தியது. ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் கூறினோம். அதை இந்தியா செய்தது. அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது.

ஆனால், தற்போது உலகில் கச்சா எண்ணெய் தேவை, விநியோகத்தை தற்காலிகமாக பூர்த்தி செய்ய ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளோம். ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்

என்றார்.