வாஷிங்டன்,
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. எனினும் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் ஈரானின் 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மீறும் வகையில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த நாட்டு கப்பல்களை சிறைபிடித்ததாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
அதே சமயம் ஈரானின் கப்பல்கள் எங்கு, எப்போது சிறைபிடிக்கப்பட்டன என்கிற தகவல்களை அமெரிக்க அரசு வழங்கவில்லை. அதே போல் தங்களின் எண்ணெய் கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈரான் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.