வாஷிங்டன்,
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக்-குக்கு பிறகு டிக்-டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் உருவாக்கப்பட்ட டிக்-டாக் செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது.
சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என்று டிக் டாக் நிறுவனம் தொடர்ந்து கூறிவருகிறது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை முன்மொழிந்த குடியரசுக்கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ஜோஷ் ஹவ்லே, அரசு வழங்கும் செல்போன்களில் அரசு ஊழியர்கள் டிக் டாக் செயலியை தடை செய்ய இந்த மசோதா வழிவகுக்கும் என்றார்.