தோஹா,
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் தீவிரவாத இயக்கம் பின்லேடனுக்கு புகலிடம் அளித்தது.
இதன்பின் பாகிஸ்தானுக்கு தப்பி சென்ற பின்லேடன் அமெரிக்க சிறப்பு படையால் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து தலீபான் அமைப்பினை கட்டுக்குள் கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசுடன் இணைந்து அமெரிக்கா போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து ஆப்கானிஸ்தான் படையினர் மீது தலீபான் தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 17 வருடங்களாக நீடித்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி அமெரிக்கா மற்றும் தலீபான் பிரதிநிதிகள் இடையே தோஹா நகரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்ட இந்த பேச்சுவார்த்தை இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதில் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்குவதனை தடுப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்துவது உள்ளிட்ட விசயங்கள் பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.