உள்நாட்டுப்போர்
ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி முதல், அதிபர் மன்சூர் ஹாதி அரசு படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. தலைநகர் சனா, கிளர்ச்சிப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தப்போரில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி சண்டை போட்டு வருகின்றன. இதில் ஆத்திரம் அடையும்போதெல்லாம் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் சவுதி அரேபியா மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக்கி உள்ளன. இந்த போரில் 4 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஐ.நா. சபையின் கணக்காகும். மேலும் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
போர் நிறுத்தம்
இந்த நிலையில் அங்கு 2 மாத கால போர் நிறுத்தம் செய்வது என அதிபர் ஆதரவு படைகளும், ஹவுதி கிளர்ச்சிப்படைகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த போர் நிறுத்தம் ரமலான் புனித மாதம் தொடங்கி உள்ள நிலையில் நேற்று அமலுக்கு வந்துள்ளன.
2016-ம் ஆண்டுக்குப்பிறகு அங்கு நாடு முழுவதும் போர் நிறுத்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த போர் நிறுத்தத்துக்கான ஏற்பாட்டை ஐ.நா. சபை செய்து, பெயரைத் தட்டிச்சென்றுள்ளது.
ஜோ பைடன் வரவேற்பு
ஏமனில் இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து இருப்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ஏமன் நாட்டில் 2 மாத கால போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த முயற்சி, ஏமன் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த நிவாரணம் ஆகும். இது, ஏமனுக்குள்ளும், ஏமனுக்கு அப்பாலும் எந்தவொரு தரப்பினரின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துகிறது. ஹூதைதா துறைமுகத்துக்குள் எரிபொருள் கப்பல்கள் நுழைவதும், சனாவில் இருந்து சிவில் விமான போக்குவரத்து குறிப்பிட்ட இடங்களுக்கு நடத்துவதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இவை முக்கியமான படிகள். ஆனாலும் போதாது.
போர் நிறுத்தம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவேண்டும். நான் முன்பு கூறியது போல இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது கட்டாயமான ஒன்று. 7 ஆண்டு கால சண்டைக்கு பின்னர் ஏமனில் அனைத்து மக்களுக்கும் நிலையான எதிர்கால அமைதியைக்கொண்டு வரக்கூடிய அரசியல் சமரசங்களை எட்டுவதற்கு பேச்சு வார்த்தை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. வேண்டுகோள்
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் விடுத்துள்ள செய்தியில், போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும், ஒத்துழைப்பு வழிமுறைகளை தாமதம் இன்றி செயல்படுத்துவதற்கும், தேவையான ஏற்பாடுகளைச்செய்யுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.