வாஷிங்டன் டி.சி.
அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுதல், அமெரிக்க விசா விதிகளில் மாற்றம், அரசு நிர்வாகத்தின் செலவுகளை குறைக்க புதிய பதவிகளை ஏற்படுத்துதல், ஈரான் மீது தாக்குதல் என பல்வேறு விசயங்களில் ஈடுபட்டு வருகிறார்.
நான் 7-க்கும் மேற்பட்ட போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன் என்று தொடர்ந்து கூறி வருவதுடன், அவற்றுக்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்றும் கூறி வருகிறார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் மகன் மற்றும் தொழிலதிபரான எரிக் டிரம்ப் வெளியிட்ட செய்தியொன்றில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் என்ற சர்வதேச விமான நிலையம், இனி ஜனாதிபதி டொனால்டு ஜே. டிரம்ப் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
இதற்கான மசோதா ஒன்றிற்கு புளோரிடா கவர்னர் ரான் டிசேன்டிஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக புளோரிடா மாகாண பிரதிநிதி மேக் வெயின்பெர்கர், கவர்னர் ரான் டிசேன்டிஸ், புளோரிடா அட்டார்னி ஜெனரல் ஜேம்ஸ் உத்மெயர் மற்றும் புளோரிடா அவையின் உறுப்பினர்களுக்கும் எரிக் டிரம்ப் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.
ஜனாதிபதி டொனால்டு ஜே. டிரம்ப் சர்வதேச விமான நிலையம் என்ற இந்த புதிய பெயர் மாற்றம் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெயர் மாற்றங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் அது உள்ளூர் விவகாரம் என்றும் தெரிவித்து உள்ளது.
எனினும், பயண அட்டவணை மற்றும் தகவல் தொகுப்புகளை மாற்றம் செய்வது உள்ளிட்ட சில நிர்வாக பணிகளை நாங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.