வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வாகியுள்ளார். அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த டொனால்டு டிரம்ப், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளதாக டிரம்ப் கூறினார்.
இதற்கிடையில் ஒருபுறம் ஜோ பைடனின் வெற்றியை ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் முடிவுகள் உறுதியான பிறகும், இது போன்ற போராட்டங்களும், பேரணிகளும் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று(சனிக்கிழமை) அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவு குறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும், டிரம்பிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், மீண்டும் டிரம்ப் ஆட்சி வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர், வாக்குகளை திருடுவதை நிறுத்துங்கள், இன்னும் நான்கு ஆண்டுகள், நாங்கள் டிரம்பை விரும்புகிறோம் என்பன போன்ற பதாகைகளை ஏந்தி சென்றனர். வாஷிங்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது, அந்திஃபா மற்றும் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் ஆகிய அமைப்புகளுக்கும் டிரம்ப் ஆதரவு அமைப்பான, ப்ரவுட் பாய்ஸ் என்ற அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாலை நேரத்திற்கு பிறகு இந்த மோதல் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவாரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒரு வாலிபருக்கு முதுகில் கத்தி குத்து விழுந்ததால் அவர் பலத்த காயமடைந்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.