இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதால், அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது. அதனால் அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.
ஆனால், துணை சபாநாயகர் காசிம் சூரி, அந்த தீர்மானத்தை நிராகரித்தார். கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். அதைத்தொடர்ந்து, இம்ரான்கான் சிபாரிசின்பேரில், அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. 9-ந் தேதி காலை 10.30 மணிக்குள், நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்துமாறு துணை சபாநாயகருக்கு உத்தரவிட்டது. எந்த உறுப்பினரையும் ஓட்டுப்போட விடாமல் தடுக்கக்கூடாது என்றும் கூறியது. ஒருவேளை தீர்மானம் தோல்வி அடைந்தால், அரசு வழக்கம்போல் இயங்கலாம் என்றும் தெரிவித்தது.
பாகிஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் திருப்பங்கள் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அவை கூடியதும் தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் இதே கோரிக்கையை முன்வைத்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு மேல் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.