காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தினை இந்தியா நீக்கிய விவகாரம் பற்றி ஐ.நா. சபைக்கு பாகிஸ்தான் கொண்டு சென்றுள்ளது. அந்நாட்டின் மனித உரிமைகளுக்கான மந்திரி ஷிரீன் மஜாரி, இந்த விவகாரம் பற்றி ஐ.நா. அமைப்புக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
காஷ்மீர் அந்தஸ்து நீக்கத்தினை சர்வதேச விவகாரம் ஆக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் பிற நாடுகளிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் ரெயில்வே துறை மந்திரி ஷேக் ரஷீத் அகமது கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, வருகிற அக்டோபர் அல்லது அதனை தொடர்ந்து வரும் மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முழு அளவில் போர் மூள கூடும் என தனது கணிப்பினை கூறியுள்ளார். இந்த செய்தியை அந்நாட்டு ஊடகமும் வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி அருகே சோன்மியானி பரிசோதனை தளத்தில் இருந்து ஏவுகணை பரிசோதனை நடத்த கூடிய சாத்தியம் உள்ளது என அந்நாட்டு விமான படை மற்றும் கப்பற்படைக்கு பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிட்டு இருந்தது.
இதனிடையே, காஷ்மீர் விவகாரத்தில் இருந்து விலகி இருக்கும் வகையில் ரஷ்யா தனது நிலையை இன்று தெளிவுப்படுத்தி உள்ளது. இது பாகிஸ்தானுக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் கூறும்பொழுது, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அனைத்து விவகாரங்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை வழியே தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசும்பொழுது, இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பதிலடி கிடைக்கும் என கூறினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ரெயில்வே துறை மந்திரி, இரு நாடுகளுக்கு இடையே போர் மூள கூடும் என தெரிவித்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.