உலக செய்திகள்

உக்ரைன் மீது போர்: “காட்டுமிராண்டித்தனமான செயல்” - ரஷியாவுக்கு உலக தலைவர்கள் கண்டனம்

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது காட்டுமிராண்டித்தனமான செயல் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

டோக்கியோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது.

ரஷியாவின் இந்தச்செயலுக்கு உலக நாடுகள் பலவும் ஓரணியில் திரண்டு கண்டனக்கணைகளை தொடுத்துள்ளன. அது பற்றிய ஒரு பார்வை இது:-

ஜோ பைடன் (அமெரிக்க ஜனாதிபதி) :-

ரஷிய அதிபர் புதின் ஒரு திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்திருக்கிறார். இது பேரழிவுகரமான உயிரிழப்பு மற்றும் மனித துன்பங்களை கொண்டு வரும்.

சார்லஸ் மைக்கேல் (ஐரோப்பிய கவுன்சில் தலைவர்) மற்றும் உர்சுலா வான்டெர் லேயன் (ஐரோப்பிய கமிஷன் தலைவர்):-

இந்த இருண்ட தருணத்தில், எங்கள் எண்ணம் எல்லாம் உக்ரைன் மற்றும் அங்குள்ள அப்பாவி பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மீதே உள்ளது. அவர்கள் இந்த தூண்டுதல் இல்லாத தாக்குதலை எதிர்கொள்ளுகின்றனர். அவர்களின் உயிருக்காக பயப்படுகின்றனர். இதற்கு ரஷிய அதிபர் மாளிகையை பொறுப்பேற்க வைப்போம்.

உக்ரான்மீதான ரஷிய படையெடுப்பு, அந்த நாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வைக்கும்.

ஒலாப் ஷோல்ஸ் (ஜெர்மனி பிரதமர்):-

இது உக்ரைன் நாட்டுக்கு ஒரு பயங்கரமான நாள். ஐரோப்பாவுக்கு ஒரு இருண்ட நாள். இது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். இதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது.

பீட்டர் பியாலா (செக் குடியரசின் பிரதமர்):-

ஒரு இறையாண்மை அரசுக்கு எதிரான முற்றிலும் நியாயமற்ற தாக்குதல் இது.

எட்வர்டு ஹெக்கர் (சுலோவாகியா பிரதமர்):-

இது நியாயப்படுத்த முடியாத காட்டுமிராண்டித்தனமான செயல் ஆகும்.

விலை கொடுக்க வேண்டும்

புமியோ கிஷிடா (ஜப்பான் பிரதமர்):-

தகவல்களை சேகரிக்கவும், நிலைமையைப் புரிந்துகொள்ளவும் நாங்கள் முழு முயற்சியையும் செய்கிறோம். உக்ரைனில் உள்ள ஜப்பானியர்களை பாதுகாப்பு முக்கியமானது, சவாலானது. நிலைமையை சரியாக புரிந்துகொண்டு, பிரச்சினையை கையாள்வோம்.

ஸ்காட் மோரீசன் (ஆஸ்திரேலிய பிரதமர்):-

ரஷியாவுக்கு எதிரான தடைகள் வெள்ளிக்கிழமை (இன்று) சட்டமாக மாறும்.

நாங்கள் இதைச்செய்வதற்கு காரணம், உக்ரைன் மீது ரஷியா தொடங்கி உள்ள தூண்டுதலற்ற, சட்டவிரோமான, தேவையற்ற, நியாயமற்ற தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கு ஒரு விலை கொடுக்கச்செய்வதுதான். இது விளாமிமிர் புதின் மற்றும் ரஷிய ஆட்சியின் விளைவுகள் இல்லாத நடவடிக்கையாக இருக்க முடியாது என்று அவர்கள் கூறி உள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருப்பதை ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.

இதே போன்று ஜெர்மனியும், துருக்கியும் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை