இஸ்லாமாபாத்
இந்தியாபாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் தாக்குதலை நிறுத்தினோம்; இதில் மூன்றாவது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா தெரிவித்தது. ஆனாலும், டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ மூலம் எனக்கு மே 11ஆம் தேதி போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு பொதுவான இடத்தில் விரைவில் பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஜூலை 25ஆம் தேதி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவை நான் சந்தித்தேன். அப்போது மோதல் தொடர்பாக இந்தியாஅமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையின் நிலை குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறியதாக ரூபியோ பதிலளித்தார்.இந்தியா எந்த மூன்றாம் தரப்பு தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரித்தது.
பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் இருதரப்பு அடிப்படையில் கண்டிப்பாக கையாளப்பட வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது.இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதில் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மந்திரியின் இந்த கருத்து மூலம், இந்தியாபாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பது மேலும் உறுதியாகியுள்ளது.