இஸ்லாமாபாத்,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக உள்ளோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தாஹிர் அண்ட்ராபி செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலுக்கு ஒரு விரிவான மற்றும் நீடித்த தீர்வை காண்பதற்காக, வரும் நாட்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தி, மத்தியஸ்தம் செய்து வைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
மேற்கு ஆசியாவில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும் முன்மொழிந்த ஐந்து அம்சத் திட்டத்திற்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சி, பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சி. மேலும் இது தற்போதைய பகைமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கான ஒரு நிலையான பாதைக்கு வழி வகுப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் வழிநடத்தும் என ஈரானும், அமெரிக்காவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அமெரிக்காவுடன் பாகிஸ்தான் மிக முக்கியமான உறவைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண அமெரிக்க தலைமையுடன் பாகிஸ்தான் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.