பாகிஸ்தான் மந்திரி
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மந்திரி ஷா மஹ்மூத் குரேசி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமீரகம் வந்துள்ளார். இதையொட்டி நேற்று அவர் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் அமையவுள்ள பாகிஸ்தான் அரங்கத்தின் மாதிரி தோற்றத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் துபாயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய-பாகிஸ்தான் விவகாரங்களில் அமீரகத்தின் 3-ம் தரப்பு சமரசத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல் அரசியல் முடிவுகளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைமைகளால் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் எந்த ஒரு முடிவும் எளிதாக்குபவையாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
இறுதியில் தெற்காசியாவின் மக்கள் தங்கள் சந்ததியினருக்கு எந்தவகையான எதிர்காலத்தை அமைத்து தர வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். பாகிஸ்தான், அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அனைத்திலும் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கை கொண்டுள்ளது.
அமீரகத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். அமீரகத்தின் வளர்ச்சிக்கு இருநாட்டு மக்களும் பங்களித்துள்ளனர். இதன்மூலம் அமீரகம் இருநாடுகளுடன் நல்ல நட்புறவில் உள்ளது என்பதை காட்டுகிறது.
நான் இங்கு வந்திருப்பது அமீரகம்-பாகிஸ்தானுடனான உறவுகளுக்கானது மட்டுமே. இந்தியா சார்ந்த பேச்சுவார்த்தைக்கு அல்ல. அமீரகத்திற்கு வருகை தரும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் சந்திப்பானது இன்னும் திட்டமிடப்படவில்லை.
பொதுவாக அமீரகம்-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நட்புறவுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க விரும்புகிறது. ஆனால் இந்தியா 3-ம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதற்கு எப்போதும் தயங்குகிறது.
அமீரகம் மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். ஒருபோதும் வெட்கப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையே சில சாதகமான முன்னேற்றங்கள் நடந்து வருகிறது. அதேபோல் தேசிய தினத்தன்று இந்திய பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளது ஒரு நேர்மறை வளர்ச்சியாகும்.
இந்தியா அமைதியான ஆப்கானிஸ்தானை பார்க்க விரும்புகிறது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் நேருக்கு நேர் சந்தித்து பேச தயங்குகின்றன. இந்தியாவின் ஒருதலைபட்ச நடவடிக்கைகளில் சிலவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் அமைதி மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு எதிரானது.
இந்தியா ஒருதலைபட்சமாக எடுத்துவரும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய தயாராக இருந்தால் பாகிஸ்தான் உட்கார்ந்து பேச தயார். பாகிஸ்தான் நாட்டுக்கு பொருளாதார உதவிகளை அளித்து வரும் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.