ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அந்த நாட்டின் மீது கடந்த 28-ந் தேதி அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலுடன் சேர்ந்து நடத்திய இந்த ராணுவ அதிரடியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.
வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வரும் இந்த போர். நேற்றுடன் ஒருவாரத்தை நிறைவு செய்து விட்டது. 8-வது நாளாக இன்றும் இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. நீடித்து வரும் போரால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை தாக்க மாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க தாக்குதலுக்கு தளமாக பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாட்டை தாக்குவோம் என்றும் அண்டை நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் ஈரான் அதிபர் மசோத் பெசோஷ்கியான் தெரிவித்துள்ளார்.