ஜெனீவா,
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டிற்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று பெரும்பாலான நாடுகள் கூறி வருகின்றன.
இதற்கிடையில் ரஷ்யாவில் தயாராகி வரும் ஸ்புட்னிக் என்ற தடுப்பூசி, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக 90 சதவீதம் வெற்றிகரமாக செயல்படக்கூடியது என்று, அந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது. பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் முதற்கட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ தரவுகளையும், உற்பத்தி நடைமுறை தொடர்பான தகவல்களையும் காண வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை மதிப்பீடு செய்ய இந்த தகவல்கள் சமர்பிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார மைய உதவி இயக்குநர் ஜெனரல் மரியாங்கெலா சிமாவோ தெரிவித்துள்ளார்.