அமீரகத்தின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் கடந்த 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி அல் அய்ன் பகுதியில் பிறந்தார்.
பள்ளிக்கூட வகுப்பு தோழர்..
இவரது தந்தையும், அமீரகத்தின் முதல் அதிபருமான ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் அல் கெத்பி ஆகியோருக்கு பிறந்தவர்களில் இவர் 3-வது மகனாவார். இவரது சகோதரர்கள் ஹம்தான், ஹசா, சயீத், இசா, நஹ்யான், சைப், தஹ்னூன், மன்சூர், பலாஹ், தியாப், ஒமர் மற்றும் காலித்.
இதில் கலீபா பின் ஜாயித், சுல்தான், நாசர் மற்றும் அகமது ஆகியோர் மரணமடைந்து விட்டனர். மேதகு ஷேக் ஜாயித் பின் அல் நஹ்யான் மொராக்கோ நாட்டின் ராபத் நகரில் பள்ளிப்படிப்பு பயின்றவர். இவரது பள்ளிக்கூட வகுப்பு தோழர் அந்நாட்டின் மன்னர் ஆறாம் முகம்மது என்பது குறிப்பிடத்தக்கது.
சொகுசான வாழ்க்கை இல்லை...
இவரது தந்தை ஒழுக்கமான பயிற்சிகளுக்காக 10 வயதில் மொராக்கோ நாட்டிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அங்கு ஒரு ஆட்சியாளரின் மகனாக சென்று வாழவில்லை. இதற்காகவே அவரது பாஸ்போர்ட்டில் கடைசி குடும்ப பெயர் நீக்கப்பட்டு இருந்தது. மாறாக பல மாதங்கள் உள்ளூர் உணவகத்தில் வெயிட்டர் வேலை பார்த்தார். தனது உணவை அவரே தயாரித்துக்கொண்டார். தனது துணிகளை அவரே சலவை செய்து உடுத்தினார்.
இதன் மூலம் ஒருவரது உதவி இல்லாமல் தனியாக அனைத்தையும் சமாளித்து வாழும் பயிற்சியை பெற்றார். அந்த நேரத்தில் தான் பிரிட்ஜில் வைத்த உணவில் பூஞ்சை வரும் வரை வைத்து சாப்பிட்டதாக கூறினார்.
அதன் பிறகு தனது 18 வயது வரை ஸ்காட்லாந்து நாட்டில் மேற்படிப்பை முடித்தார். கடந்த 1979-ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் ராயல் ராணுவ பயிற்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். இந்த பயிற்சியில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டரை இயக்குவதில் கைதேர்ந்தார். இன்னும் தன்னந்தனியாக பாதுகாவலர்கள் இல்லாமல் ஹெலிகாப்டரை ஓட்டிக்கொண்டு நாட்டை வலம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மனமாற்றம்
கடந்த 1980-ம் ஆண்டில் விடுமுறைக்காக தான்சானியா நாட்டிற்கு சென்றார். அங்கு மசாய் பழங்குடியினரை சந்தித்து அவர்களது வழக்கம் மற்றும் வறுமை குறித்து அறிந்தார். பிறகு நாட்டிற்கு திரும்பி தனது தந்தை ஷேக் ஜாயித்திடம் அங்குள்ள மக்கள் சிரமப்படுவதாகவும் பலர் வறுமையில் வாடுவதாகவும் கூறினார்.
அப்போது அவரது தந்தை நீ என்ன உதவி செய்தாய் என கேட்டார். அதற்கு அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லவே என வெகுளியாக பதிலளித்தார். உடனே ஷேக் ஜாயித் அவரது கையை இறுக பற்றிக்கொண்டு கோபத்துடன் பார்த்து நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள் என கூறினார். இந்த சம்பவம் அவரை மனிதநேயமிக்க மனிதராக மாற்றியது எனலாம். அதன் பிறகு அமீரகத்திலேயே ராணுவ பயிற்சியை தீவிரமாக பெற்று வந்தார்.
நம்பிக்கை மிகுந்த தலைவர்....
கடந்த 2003-ம் ஆண்டில் அபுதாபியின் துணை பட்டத்து இளவரசராக மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித்தை நியமித்தார். பிறகு கடந்த 2004-ம் ஆண்டிலேயே அவருக்கு பட்டத்து இளவரசர் பதவி வழங்கப்பட்டது. அதற்கு அடுத்து 2005-ம் ஆண்டில் அமீரக ஆயுதப்படைகளின் துணை சுப்ரீம் கமாண்டர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2004-ம் ஆண்டு முதல் இதுவரை அபுதாபி நிர்வாக கவுன்சில் தலைவராக அவரே பதவியில் இருந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு சகோதரர் ஷேக் கலீபா பின் ஜாயித் ஆட்சி பொறுப்பேற்றார். அதன் பின் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டபோது அனைத்து அரசு அலுவல்களையும் தானே கவனித்துக்கொண்டு வந்தார்.
வெளியுறவு கொள்கைகள், மனிதாபிமான சேவைகள், நாட்டின் முக்கிய முடிவுகள் என தலைக்கு மேல் பெரும் பொறுப்புகளை சுமந்து வந்தார். மனிதநேயம், மதநல்லிணக்கத்துடன் அனைவருடன் அன்பாக பழகும் பண்பை பெற்றவர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் தற்போது நாட்டின் நம்பிக்கை மிகுந்த தலைவராக பொறுப்பேற்று அனைவரது வாழ்த்துகளையும் பெற்று வருகிறார். நாமும் அவரை வாழ்த்துவோம்.