ஜெனிவா,
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கூறுகையில், உலகளவில் புதிய கொரானா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை 17 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆனால் புதிய கொரானா நோய்த்தொற்றுகள் சுமார் 8 சதவிகிதம் உயர்ந்து 11 கோடியாக பதிவாகியுள்ளதாகவும், 43,000 புதிய இறப்புகள் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளது.
மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் 20 சதவிகிதமாக பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் பாதிப்பு சுமார் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பசிபிக் பகுதியில் 29 சதவிகிதமும், ஆப்பிரிக்காவில் 12 சதவிகிதமும் கொரானா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
பல நாடுகளில் தொற்றின் பாதிப்பு குறைந்து வந்தாலும், மேற்கு பசிபிக் பகுதியில் டிசம்பரில் இருந்து எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல நாடுகள் தங்கள் கொரானா சோதனை முறைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன. மேலும் முன்பை விட மிகக் குறைவாகவே சோதனை செய்கின்றன, இதனால் பல புதிய பாதிப்புகள் கண்டறியப்படாமல் போகிறது என்று கூறியுள்ளது.