உலக செய்திகள்

ரனில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை - இலங்கை அதிபர் சிறிசேனா

ரனில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது என்று இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது நடைபெற்ற உள்நாட்டு போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர் அங்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபர் ஆனார்.

அதன்பிறகு அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விக்ரமசிங்கேயின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், சிறிசேனா கட்சியின் ஆதரவுடன் ரனில் விக்ரமசிங்கே பிரதமர் ஆனார். அந்த இரு கட்சிகளும் இணைந்து ஒற்றுமை அரசு என்ற பெயரில் கூட்டணி அரசை உருவாக்கின

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியது ஆளும் கட்சி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் சிறிசேனாவுக்கும், விக்ரமசிங்கேவுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு சிறிசேனா கட்சி எம்.பி.க்கள் பலர் ஆதரவு தெரிவித்ததால் மோதல் அதிகரித்தது. அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மீது அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனா, நேற்று முன்தினம் திடீரென்று பிரதமர் பதவியில் இருந்து விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக அறிவித்து, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதும் அதிபர் சிறிசேனா, விக்ரமசிங்கேவுக்கு எழுதிய கடிதத்தில், உங்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுள்ள நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட விக்ரமசிங்கே, பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பதாக கூறி இருக்கிறார். இதனால் அங்கு யார் பிரதமர் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும். நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார். ரணில் விக்ரமசிங்கேயின் சிறப்பு உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் பலவந்த தலையீடு, நாட்டின் அமைதியை சீர்குலைத்துவிட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை தனது அனுமதியுடன் தான், முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியத்துறை அலுவலகத்திற்கு முன்னாள் மந்திரி அர்ஜுன ரனதுங்கே சென்ற போது பாதுகாவலர்கள் திடிரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அர்ஜுன ரனதுங்கேவின் பாதுகாவலர்கள் திடிரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கொழும்பில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில், ரனில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்சனை ஏற்பட்டது என்று அதிபர் சிறிசேனா பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவெளியிட்டுள்ள விளக்கத்தில்,

ரனில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது. கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரனில் விக்ரமசிங்கே பிடிவாதமாக இருந்தார். இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது. என்னை கொல்ல சதி நடத்ததால் வேறு வழியின்றி ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படியே பிரதமரை மாற்றியதாக சிறிசேனா கூறியுள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு