உலக செய்திகள்

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சிறையிலேயே மரணமடைய கூடும் : 60 டாக்டர்கள் இங்கிலாந்து உள்துறை செயலாளருக்கு கடிதம்

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உயர் பாதுகாப்பு உள்ள இங்கிலாந்து சிறையில் மரணமடையக்கூடும் என உள்துறை செயலாளருக்கு 60 டாக்டர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

தினத்தந்தி

லண்டன்,

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே சுவீடன் நாட்டில் இவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் புகார்களை கூறினார்கள். இதனால் நாடு கடத்தும் சூழ்நிலை உருவானதால் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார்.

அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமீன் நிபந்தனையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு 50 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு நாளில் 23 மணி நேரம் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், இதன் காரணமாக அவரது நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும் அவரது வக்கீல் கார்லஸ் பவேடா கூறி இருந்தார்.

ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் நில்ஸ் மெல்சர் கடுமையான கவலை, மன அழுத்தம் மற்றும் உதவியற்ற தன்மை ஆகியவற்றால் அசாஞ்சேயின் உடல்நலம் படிப்படியாக நலிவடைந்து வருகிறது. துல்லியமாக என்ன நடக்கும் என உறுதியாகக் கணிப்பது கடினம் என்றாலும் மாரடைப்பு அல்லது நரம்பு தளர்வு சம்பந்தப்பட்ட உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாக விரைவாக உருவாகலாம் என அவர் கூறி இருந்தார்.

இந்த நிலையில், 60-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உள்துறை செயலாளருக்கு எழுதிய 16 பக்க கடித நகலை இன்று வெளியிட்டு உள்ளனர். அதில் அவர்கள் ஜூலியன் அசாஞ்சேயின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி உள்ளனர்.

டாக்டர்கள் இங்கிலாந்தின் உள்துறை மந்திரியின் உள்துறை செயலாளர் பிரிதி படேலுக்கு எழுதிய கடிதத்தில், தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையிலிருந்து அசாஞ்சேவை பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு மாற்றுமாறு கூறி உள்ளனர். இந்த டாக்டர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவீடன், இத்தாலி, ஜெர்மனி, இலங்கை, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஜூலியன் அசாஞ்சேயின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த எங்கள் தீவிர கவலைகளை வெளிப்படுத்த டாக்டர்களாக நாங்கள் இந்த கடிதத்தை எழுதி உள்ளோம். அசாஞ்சேவிற்கு உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய நிலை குறித்து அவசர நிபுணர் மருத்துவ மதிப்பீடு தேவை என்றும் அதில் கூறி உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு