உலக செய்திகள்

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ கோரத்தாண்டவம்! 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரங்கள் எரிந்து நாசம்... விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2026-ம் ஆண்டு மனித வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

பியூனோஸ் அயர்ஸ்,

2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தெற்கு அரைக்கோள நாடுகள் கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. அவை நெருப்பு வளையத்தில் சிக்கியுள்ளன. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகியுள்ள வெப்பநிலையே இந்த தீ விபத்துகளுக்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளதால், அங்குள்ள காடுகள் கொழுந்து விட்டு எரிகின்றன. விக்டோரியா மாகாணத்தில் மட்டும் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. இதில் சுமார் 15,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய வெப்ப அலைகளை கவனிக்கும்போது, 2026-ம் ஆண்டு மனித வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். எல் நினோ (El Nino) தாக்கம் வலுவடைந்தால், புவியின் சராசரி வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டும் என அஞ்சப்படுகிறது.

இதேபோன்று, இயற்கையான குளிர் சுழற்சியானது, மனிதனால் விளைவிக்கப்பட்ட பருவநிலை தாக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மரங்கள் கூட காட்டுத்தீயில் சிக்கியுள்ளன. பல தசாப்த வறட்சி மற்றும் மின்னல் தாக்குதலுக்கு அவை உட்பட்டு எரிந்து வருகின்றன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.