ஆப்கானிஸ்தானில் தொடரும் பதற்றம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.புதிய அரசை அமைக்க தலீபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
உலக நாடுகள் குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்கா தான் காரணம் என உலக நாடுகள் பலவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதற்காக வருந்தவில்லை என்றும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் கூறி வருகிறார்.இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார்.
வரலாறு சரியான முடிவாக பதிவு செய்யும்
அப்போது அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை வரலாறு தர்க்க ரீதியாக சரியான முடிவு என்று பதிவு செய்யும். இன்றைய நிலையில் நாம் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லவில்லை என்றால் எப்போது செல்வோம். இப்போது ஆப்கனை விட்டு வெளியே செல்லவில்லை என்றால் எப்போது புறப்படுவோம்? இன்னும் 10 ஆண்டுகள்? இன்னும் 5 ஆண்டுகள்? நான் எதிர்காலத்தில் உங்கள் மகன், மகளை ஆப்கனுக்கு சண்டைக்குச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என கூறினார்.அப்போது நிருபர்கள் அவரிடம் தலீபான்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
நான் யாரையும் நம்பவில்லை
அதற்கு ஜோ பைடன் ஆம் உள்ளது. அது அவர்களின் நடத்தையை பொறுத்தது. தலீபான்கள் இதுவரை அமெரிக்க வீரர்களைத் தாக்கவில்லை. அவர்கள் நாடு விட்டு நாடு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தலீபான்கள் சொன்னதைச் செய்கிறார்களா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும் என கூறினார்.அதன் பின்னர் நிருபர்கள் அவரிடம் நீங்கள் தலீபான்களை நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, நான் யாரையும் நம்பவில்லை'' என்று ஜோ பைடன் கூறினார்.