உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு எதிராக பெரும்பான்மையை நிரூபிப்போம்- எதிர்க்கட்சி அறிவிப்பு

இலங்கை அரசுக்கு எதிராக இந்த வாரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்றும், இதில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி, ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கு எதிராக அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது. அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.

ஆனால் இருவரும் பதவி விலக மறுத்து வருவதால் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமும், அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானமும் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி.) கட்சி இதில் தீவிரமாக உள்ளது.

இதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறி சுயேச்சையாக இயங்கி வரும் எம்.பி.க்களின் ஆதரவை அந்த கட்சி திரட்டி வருகிறது. இதில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை திரட்டி விட்டதாக சமீபத்தில் அந்த கட்சி அறிவித்து இருந்தது.

பதவி விலக வேண்டும்

இதைத்தொடர்ந்து அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இந்த வாரம் தாக்கல் செய்ய இருப்பதாக எஸ்.ஜே.பி. கட்சி அறிவித்து உள்ளது.

அந்த கட்சியின் எம்.பி.யும், தலைமை எதிர்க்கட்சி கொறடாவுமான லட்சுமண் கிரியல்லா இது குறித்து கூறுகையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மெஜாரிட்டியை நாங்கள் நிரூபிப்பதை ஒவ்வொருவரும் பார்க்க முடியும். அதை நாங்கள் எப்படி எட்டுவோம் என்பதை தற்போது கூற முடியாது என்று தெரிவித்தார்.

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என அறிவுறுத்திய அவர், பின்னர் அரசின் தூண்களுக்கு இடையேயான சமநிலையை உறுதிப்படுத்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்,

இந்த கட்சியின் மற்றொரு எம்.பி.யான முஜிபுர் ரகுமான் கூறும்போது, அதிபருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானமும் எங்கள் கட்சி சார்பில் கொண்டுவரப்படும். இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தார்.

இடைக்கால அரசு

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான மந்திரிசபையை மாற்றி விட்டு புதிய பிரதமர் மற்றும் மந்திரிசபை மூலம் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என புத்த மத தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த அழுத்தத்துக்கு பணிந்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து தனது சகோதரர் மகிந்தவை நீக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் மகிந்த ராஜபக்சேவை நீக்குவது தொடர்பாக அதிபர் எந்த திட்டமும் வெளியிடவில்லை என பிரதமரின் அலுவலகம் மறுத்து இருந்தது. பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் எனவும், எந்தவித இடைக்கால அரசும் எனது தலைமையில்தான் அமைய வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

புத்தமத மடாதிபதி எச்சரிக்கை

இந்த நிலையில் இடைக்கால அரசு அமைக்க தவறினால் அரசுக்கு எதிராக மத ஆணை பிறப்பிக்கப்படும் என புத்தமத மடாதிபதி அகலக்கடா சிறிசுமனா எச்சரிக்கை விடுத்து உள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி, இடைக்கால அரசு அமைக்க வழிவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி, ஓராண்டுக்கு இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொண்டோம். அந்த காலத்தில் சிறப்பு குழு மூலம் அரசு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இடைக்கால அரசு அமைக்க தவறியதற்காக மத ஆணை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் சிறிசுமனா கூறினார்.

இலங்கையின் சக்தி வாய்ந்த புத்த மத மடாதிபதிகள், அரசில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்