ஜெருசலேம்,
இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் 3 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை கிடைக்காத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக தொடர்ந்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த 4-வது பொதுத்தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், நீண்ட இழுபறிக்கு பின் எதிர்க்கட்சி தலைவரான நப்தாலி பென்னட் 8 சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் நப்தாலி பென்னட் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது.
இந்த நிலையில் ஓராண்டு பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பாகவே நப்தாலி பென்னட்டின் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஒருவர் தனது ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இதன்மூலம் நப்தாலி பென்னட் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், நிச்சயமாக ஆட்சி கவிழும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அப்படி நடந்தால் 3 ஆண்டுகளில் 5-வது முறையாக இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.