டோக்கியோ,
எலக்டரானிக் சாதனங்கள், நவீன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றில் புதுமைகளை புகுத்துவதில் ஜப்பான் எப்போதும் முன்னோடியாக திகழ்கிறது. அந்த வகையில் அந்நாட்டில் தற்போது உலகின் முதல் இரட்டை பயன்பாட்டு வாகனம் DMV (Dual Mode Vehicle) உருவாக்கப்பட்டுள்ளது.
சாலையிலும், ரெயில் பாதைகளிலும் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் ஒரு மினிபஸ் போல தோற்றமளிக்கிறது. சாலையில் செல்லும் போது இந்த வாகனம் ரப்பர் டயர்களில் இயங்குகிறது. அதே போல அதன் அடிப்பகுதியில் இருக்கும் எஃகு சக்கரங்கள் மூலம் ரெயில் பாதையில் இறங்கி, ஒரு ரயில் பெட்டியாகவும் செயல்படுகிறது.
இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் 21 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. ரெயில் பாதைகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், சாலைகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்திலும் இயங்கும் என்று ஆசா கோஸ்ட் ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசா கோஸ்ட் ரெயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், ஜப்பானில் குறைந்த மக்கள்தொகை கொண்ட கையோ பொன்ற சிறிய நகரங்களுக்கு இந்த வாகனங்கள் உதவக்கூடும். இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் (DMV) உள்ளூர் மக்களுக்கு பேருந்தாகவும், ரயிலாகவும் பயன்படும். அதே சமயம் சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவும் என்று தலைமை நிர்வாக அதிகாரி ஷிகேகி மியுரா கூறினார்.