உலக செய்திகள்

அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை தாக்கிய ஈரான்: திகைத்த உலக நாடுகள்

எப்-35 விமானம் உலகிலேயே மிகவும் நவீனமானது என்றும், ரேடார்களில் சிக்காதது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது.

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் நேற்று 21-வது நாளை எட்டியது. ஈரான் மக்கள் பாரசீக புத்தாண்டான (நவ்ருஸ்) நேற்று கொண்டாடினர். ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது.தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் போர் விமானங்களும் குண்டுவீசியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் இதில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதற்கு பதிலடியாக, நவ்ருஸ் தினத்திலும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது. குறிப்பாக ஜெருசலேம் நகரை குறிவைத்து நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் படைகள் செலுத்தின.இந்த தாக்குதல்களில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் அங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்காப்பு மையங்களுக்கு சென்று பதுங்கினர்.ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக நேற்றும் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. மேலும், முதல் முறையாக சிரியாவிலும் திடீர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இஸ்ரேலின் தெற்கு சுவைதா மாகாணத்தில் உள்ள சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்கியதாக சிரியா தெரிவித்துள்ளது.

மூன்று வாரங்களை கடந்துள்ள இந்த போரில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் ஈரானில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். லெபனானில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.இதற்கிடையே, அமெரிக்காவின் அதிநவீன எப்-35 போர் விமானத்தை ஈரான் தாக்கியிருப்பது உலக நாடுகளை திகைக்க வைத்துள்ளது. இந்த எப்-35 விமானம் உலகிலேயே மிகவும் நவீனமானது என்றும், ரேடார்களில் சிக்காதது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது.

அதேபோல், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்துவிட்டோம் என்று டிரம்ப் கூறியிருந்தார். இத்தனைக்கும் மத்தியில் ஈரான் எப்-35 விமானத்தை தாக்கியுள்ளது. தாக்க்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதாக ஈரான் கூறினாலும், அது மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விமானத்தை இடைமறிக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு அமெரிக்காவிற்கு ஈரான் அதிர்ச்சி கொடுத்துள்ளது.