உலக செய்திகள்

எங்களுடைய வலிமையை பார்க்க போகிறீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

உலக தரம் வாய்ந்த தொழில் நுட்ப பல்கலைக்கழகம் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி படையினர் குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தெஹ்ரான்

மேற்காசிய போரால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஈரானிலுள்ள ஷரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணி படையினர் வான்வழியாக குண்டுவீசி நடத்திய கடுமையான தாக்குதலில் அது பலத்த பாதிப்பை சந்தித்தது.

இந்த தாக்குதலில், பல்கலைக்கழகத்தின் மசூதி தாக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் சுட்டி காட்டுகின்றன. அறிவியல் மற்றும் கலாசார மையத்தின் கட்டிடங்களில் ஒன்றின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. அருகேயுள்ள கட்டிடங்களும் தாக்குதலில் சிக்கின.

இதனால், யாரும் உயிரிழக்கவில்லை என்றபோதும், முழு அளவிலான பாதிப்பை பற்றி ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். பலர் வீடுகளை விட்டு, விட்டு முன்னெச்சரிக்கையாக தப்பியோடினர்.

இந்நிலையில், ஈரானின் வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி இன்று கூறும்போது, உலக தரம் வாய்ந்த தொழில் நுட்ப பல்கலைக்கழகம் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி படையினர் குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பிற பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்திய சூழலில் இது நடந்துள்ளது.

தொலைதூர விண்மீன் கூட்டத்தில் அறிவு இருந்தாலும், ஈரானியர்கள் அதனை அடையும் திறனை பெற்றுள்ளனர். எங்களுடைய வலிமையை ஆக்கிரமிப்பாளர்கள் பார்க்க போகிறார்கள் என்று கூறினார்.