காபுல்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் சுற்றி வளைக்கப்பட்டதால் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார். அவர் தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு சார்பில் முதல் முறையாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அளிப்போம். காபுலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது.
பெண்கள் சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிராக பாகுபாடு இருக்காது. இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகளை வழங்க தலிபான் உறுதி பூண்டுள்ளது.
நாங்கள் எந்த வித எதிரிகளையும் சம்பாதிக்க விரும்பவில்லை. எங்கள் நிலப்பரப்பை உலகில் யாருக்கும் அல்லது எந்த நாட்டிற்கும் எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம். சர்வதேச சமூகமும் எங்களை அங்கீகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.