செய்திகள்

ஓட்டுக்கு பணம் வாங்காமல் சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் பேச்சு

தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமையாகும். வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் பேசினார்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி பழைய மீன்மார்க்கெட் அருகே நேற்று நடந்தது. வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு, காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் பாலு, ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகர்கள் சங்க தலைவர் ஞானவேலு வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் என சுமார் 20 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். அவர்கள் அனைவரும் இந்த தேர்தல் சிறப்பாக நடைபெற உழைத்து வருகிறார்கள். வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமையாகும். தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை நியாயமான முறையில் செலுத்தி சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.

ஓட்டுக்கு பணம் வாங்கினால் வேட்பாளரிடம் கேள்வி கேட்கும் தார்மீக உரிமையை இழந்து விடுகிறோம். உங்கள் உரிமைகள், கோரிக்கைகளை வேட்பாளர்களிடம் நிறைவேற்றும்படி கேட்பது தவறு இல்லை. ஆனால் வாக்களிக்க பணம் வாங்கினால் உங்கள் உரிமையை தட்டிக்கேட்க முடியாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து எம்.எல்.ஏ., எம்.பி. ஆகும் நிலையை மாற்ற வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் சராசரியாக 73 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 27 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை. அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். மேலும் தேர்தல் முறையை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம், வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள், வணிகர்களிடம் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனர்.

நிகழ்ச்சியை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் துரைசாமி தொகுத்து வழங்கினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு