செய்திகள்

இளைஞர்களின் வழிகாட்டி ஜெய்பால் ரெட்டி, சுஷ்மா சுவராஜ்

தேசப் புகழ்பெற்ற எனக்கு அருமையான இரண்டு நண்பர்கள் ஜெய்பால் ரெட்டி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் மரணம், மிகப்பெரிய இழப்பை அடைந்துவிட்டதாக என்னை உணரச் செய்தது.

தினத்தந்தி

தேசப் புகழ்பெற்ற எனக்கு அருமையான இரண்டு நண்பர்கள் ஜெய்பால் ரெட்டி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் மரணம், மிகப்பெரிய இழப்பை அடைந்துவிட்டதாக என்னை உணரச் செய்தது. என்னைப் பொறுத்தவரை இரண்டு பேருமே உடன் பிறந்த சகோதர, சகோதரியைப் போன்றவர்கள். ஜெய்பால் ரெட்டி எனது அண்ணனும், சுஷ்மா சுவராஜ் எனது இளைய சகோதரியையும் போன்றவர்கள். இரண்டு பேருமே இந்தியாவில் சமீபகாலங்களில் பிரசித்தி பெற்ற பேச்சாளர்களாகவும், தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளாகவும், திறமையான நிர்வாகிகளாகவும் திகழ்ந்தனர். வெற்றிகரமாக விளங்கிய அவர்களின் பொதுவாழ்க்கையில் இரண்டு பேருமே பல்வேறு குணாதிசயங்களில் மட்டுமல்லாமல், இயலாமை அல்லது வேற்றுமைகளில் கூட ஒற்றுமையாக காணப்பட்டனர்.

77 வயதான ஜெய்பால் ரெட்டி போலியோவினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் மக்கள் தொண்டாற்றுவதில் அவருக்கு இருந்த உற்சாகத்தை போலியோ என்ற இயலாமையினால் முடக்க முடியவில்லை. மாற்றுத்திறனாளி என்ற சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தோடு விளங்கியது மட்டுமல்லாமல், அசாதாரண திறமைசாலியாகவும் அவர் திகழ்ந்தார். அவரது உடல் குறைபாடு பற்றி நான் கேட்டபோதெல்லாம், தனது உற்சாகத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதை, உடலில் காணப்படும் ஊனத்தினால் குறைத்துவிட முடியவில்லை என்று பதிலளிப்பார். அவரது வாழ்க்கை என்பது, அடைத்துவிட முடியாத உத்வேகம் மூலம் அனைத்து தடைகளையும் தாண்டி உயர் எல்லைகளை எட்ட முடியும் என்பதற்கான வீர காவியமாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு விவகாரங்களையும் அலசி ஆராய்ந்து பார்த்து சொற்பொழிவாற்றக்கூடிய அறிவுஜீவி ஜெய்பால் ரெட்டி. அவ்வளவு புத்திகூர்மையுடனும், சொற்திறனுடனும் இருந்ததால், அவர் சார்ந்திருந்த கட்சியின் அதிகாரமிக்க செய்தித் தொடர்பாளராக திகழ்ந்தார். ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல பேச்சாளராக விளங்கினார். ஆந்திர பிரதேச சட்டசபையில் நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்து கருத்துகளை பரிமாறியுள்ளோம்.

நமது சமூக, அரசியல் விவகாரங்களில் பாலினப்பாகுபாடு என்பது இன்னும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளது. பெண்கள் பெற வேண்டிய உரிமைகளுக்கு தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் 67 வயதான சுஷ்மா சுவராஜ், இப்படிப்பட்ட சமூகரீதியான இயலாமையை எதிர்த்து அறைகூவல் விடுத்தவராகும். இயலாமையைக் கொண்டுவரும் பல்வேறு வலிய சமூகத்தடைகளை தனது வார்த்தைகளினாலும், நடவடிக்கைகளாலும் வென்றுகாட்டி, ஜெய்பால் ரெட்டியைப்போல சாதித்துக்காட்டினார் சுஷ்மா. ஹரியானாவில் வைதீகமான கட்டுப்பாடுகள் மிக்க குடும்பத்தில் பிறந்த சுஷ்மா சுவராஜ், மாநில அமைச்சரவையில் மிக இளமையான மந்திரியாக இடம் பெற்றிருந்தார். நாட்டின் முதல் முழுநேர வெளியுறவுத்துறை மந்திரியாகவும் உயர்ந்து, சாதனை படைத்தார். இது சாதாரண சாதனையல்ல.

ஜெய்பால் ரெட்டி மற்றும் சுஷ்மா சுவராஜ்க்கு வெவ்வேறு சித்தாந்தங்கள் இருந்தன. ஆனால் அவசர நிலைக்குப்பிறகு ஜனதா கட்சியில் அரசியலில் இணைந்திருந்தனர். இந்தியாவை கட்டமைப்பதில் இரண்டு பேருமே தங்கள் அர்ப்பணிப்பில் உறுதியாக இருந்தனர்.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் அரசியலில் நானும், ஜெய்பால் ரெட்டியும் நீண்ட நாட்கள் பங்காற்றி இருக்கிறோம். மூத்த சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் அவர் எனது ஆரம்பகட்ட அரசியலில் நட்புரீதியிலான வழிகாட்டியாக இருந்தார். ஆந்திர சட்டசபைக்குள் நான் முதன்முதலில் 1978-ம் ஆண்டில் எம்.எல்.ஏ.யாக அடியெடுத்து வைத்தேன். சட்டசபை நடக்கும் காலகட்டங்களில் காலை உணவுக்காக எங்கள் வீடுகளில் நாங்கள் சந்திப்பது வழக்கம். சட்டசபையில் நடக்கும் அன்றைய நிகழ்வுகள் குறித்து ஆலோசிப்போம். அன்றைய நாட்களில் சட்டசபையில் எங்களது தலையீடுகள்தான் மறுநாளில் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றிருக்கும்.

நிலச்சுவான் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சமத்துவம், உரிமைகள் ஆகியவை ஜெய்பால் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை தூண்டிவிட்டன. அவர் எடுத்திருந்த அரசியல் கோட்பாடுகளை எந்தவிதத்திலும், எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளவும் இல்லை, அதற்காக குரல் கொடுக்க அவர் தயங்கியதும் இல்லை. தேசத்தில் வரவேண்டிய மாற்றங்கள் பற்றியும், அரசியலில் நிகழும் மாற்றங்கள் பற்றியும் நாங்கள் இரண்டு பேரும் அடிக்கடி கலந்தாலோசிப்போம்.

அரசியலில் எனது ஆத்ம துணையாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். அவரது வாழ்நாளின் இறுதிவரையில் எங்களுக்கிடையே இருந்த நல்லுறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது. சுஷ்மாவுக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்தச் சென்றபோது, அவரது மகள் பன்சுரி அழுதபடி என்னிடம் ஒன்றைக் கூறினார். அவர், வெங்கையா நாயுடுவை சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம் எனது பிரச்சினைகளில் இருந்து நீங்கிவிட்டதாக உணர்ந்து புத்துணர்வு பெறுவேன். ஒரு தங்கைக்கு அண்ணன் கொடுக்கும் ஆலோசனையாகவே அவை இருக்கும் என்று எனது தாயார் (சுஷ்மா) அடிக்கடி குறிப்பிடுவார் என்று என்னிடம் தெரிவித்தார்.

எனது அன்பு மிகுந்த தங்கையை என் கையில் இருந்து இந்த கொடிய விதி பிரித்துச் சென்றுவிட்டதே. பல்வேறு திருப்பங்கள் நிறைந்த சுஷ்மா சுவராஜின் அரசியல் வாழ்க்கையோடு நான் பயணித்திருக்கிறேன். தோல்வியிலும் சரி, வெற்றியிலும் சரி, அவர் துணிச்சலுடனும், அமைதியுடனும்தான் இருப்பார். அவரது உடைகள், செய்கைகள், பேசும்போது பயன்படுத்தும் வார்த்தைகள், உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை, அன்புகாட்டுவது, அமைதி, மூத்தவர்களிடம் காட்டும் பணிவு, மற்றவர்களை காயப்படுத்தாமல் உரையாற்றுவது போன்றவையெல்லாம் இந்த நவீன காலத்தில் சுஷ்மாவை எளிதில் அணுகக்கூடிய அரசியல் தலைவர்களுள் ஒருவராக உருவாக்கியது. அனைத்து அரசியல் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் அவருக்கு மதிப்பையும், மரியாதையையும் அவரது குணாதிசயங்கள் பெற்றுத்தந்தன.

ஜெய்பால் ரெட்டியும், சுஷ்மா சுவராஜும் வரம் பெற்ற பேச்சாளர்கள். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றிருந்தவர் ஜெய்பால் ரெட்டி. இந்தியில் மிகத்தெளிவாக பேசக்கூடிய சுஷ்மாவுக்கு சமஸ்கிருதத்திலும், இந்திய கலாசாரத்திலும் ஆழ்ந்த அறிவு இருந்தது. நாடாளுமன்றத்தில் எழுந்து பேசும்போதெல்லாம் இரண்டு பேரும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடுவார்கள்.

சுஷ்மா சுவராஜின் அரசியல் வாழ்க்கை உறுதியாக மேலே சென்றது. ஜெய்பால் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இரண்டு பேருமே புகழப்படத்தக்கவர்கள். அதை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். அனேக அனுபவங்கள், அதிக அறிவாற்றல் கொண்ட அரசியல் தலைவர்கள் குழுவில் இவர்களும் உள்ளனர். இளம் அரசியல்வாதிகளுக்கு இவர்கள் முன்மாதிரியாக உள்ளனர்.

உடலளவில் அவர்கள் நம்மிடம் இல்லை என்றாலும், அவர்களின் குரல் இன்றும் நம்மிடையே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அது அவர்களை நம்மிடம் இருப்பதாகவே உணரச் செய்கிறது. இன்னும் பல ஆண்டுகள் மற்றவர்களுக்கு அவர்கள் உத்வேகம் அளிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

வெங்கையா நாயுடு, இந்திய துணை ஜனாதிபதி.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து