மாவட்ட செய்திகள்

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு காரணமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள-தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவக்குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வைரஸ் காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 படுக்கைகளுடன் கூடிய பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் இருப்பதால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 20 முதல் 25 பேரை தங்க வைத்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும் இந்த வார்டில் 24 மணிநேரமும் பணியாற்றும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் நிபா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இதுவரை தேனி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறியுடன் யாரும் வந்தால் அவர்களை உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். நிபா வைரஸ் சிகிச்சை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கருத்தரங்கு நடத்தப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மருத்துவமனை பணியாளர்களுக்கு நிபா வைரஸ் தாக்குதல் குறித்து கருத்தரங்கு நடத்தப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளங்கோவன் கலந்து கொண்டு நிபா வைரஸ் குறித்து விளக்கி பேசினார்.