மாவட்ட செய்திகள்

தனியார் பழைய இரும்பு உருக்காலையில் தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி மற்றொருவர் படுகாயம்

வாழப்பாடி அருகே பழைய இரும்பு உருக்காலையில் தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

வாழப்பாடி,

சுவர் இடிந்து விழுந்தது

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமண்குமார் யாதவ் (வயது23). கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் அணிருத்சகானி (36). இவர்கள் 2 பேரும் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் கணபதி நகரில் உள்ள பழைய இரும்பு உருக்காலையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் சுவர் இடிந்து 2 பேரின் மீதும் விழுந்தது. இதில் 2 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

பலி

மேலும் லட்சுமண்குமார் யாதவ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அணிருத்சகானி பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் லட்சுமண் குமார் யாதவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.