பெங்களூரு:-
கூட்டணிக்கு அதிருப்தி
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்வியில் இருந்து இன்னும் பல தலைவர்கள் மீளாமல் இருந்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சி தலைவரை கூட இதுவரை பா.ஜனதா தலைமை நியமிக்கவில்லை. இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை டெல்லியில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி சந்தித்து பேசி இருந்தார்.
இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்கு, கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதா தலைவர்கள் பலர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்-மந்திரி சதானந்த கவுடா கூட, தங்களிடம் கலந்து பேசாமலும், இங்குள்ள தலைவர்களை தூரம் வைத்துவிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜனதா தலைமை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறி இருந்தார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் முன்னாள் மந்திரிகள் சோமண்ணா, ரேணுகாச்சார்யா, பச்சேகவுடா எம்.பி, எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.வான ப்ரீத்தம் கவுடா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள், ஜனதாதளம் (எஸ்) கட்சியுடனான கூட்டணிக்கு அதிருப்தி தெரிவித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்து இருந்தனர். இது கூட்டணி விவகாரத்தில் 2 கட்சி தலைவர்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பா.ஜனதா மேலிட தலைவர்கள் சுதாரித்து கொண்டு, கூட்டணி குறித்து யாரும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
கர்நாடகம் மற்றும் பா.ஜனதாவின் நலனை கருத்தில் கொண்டு கூட்டணி முடிவு எடுத்துள்ளதாகவும், சில நேரங்களில் அரசியல் காரணங்களுக்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும், அதனை மீறி பகிரங்கமாக கருத்து தெரிவித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பா.ஜனதா மேலிட தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.