விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கிரேசி பொன்மலர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அசோக்மாதவன் தொடக்க உரையாற்றினார். செயலாளர் இந்திராகாந்தி, துணைத்தலைவர் ஜெயஸ்ரீ ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் ஆதிசங்கரன், வட்டச் செயலாளர் கோவிந்தராஜலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மருத்துவ பணியாளர் வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் இதை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணை செயலாளர்கள் சரிதா, பிரீத்தி உள்பட செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அறிவுக்கரசி நன்றி கூறினார்.