மாவட்ட செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனை கூட்டம்: சசிகலா ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு

போடியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவின் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆலோசனை கூட்டம்

போடியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சார்பில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.பார்த்தின் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. சையதுகான், மாவட்ட துணைச்செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக் குமார், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் கலந்து கொண்டனர். பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, போடிக்கு வருகை தரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பரபரப்பு

இந்த நிலையில் கூட்டம் நடந்த ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்தின் அருகே சசிகலா ஆதரவாளரும், போடி நகர அ.தி.மு.க. செயலாளருமான பாலமுருகன் வீடு உள்ளது. இவருடைய வீட்டில் சசிகலா ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அமைதியான முறையில் கூட்டம் நடத்தி முடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.