புதுச்சேரி
புதுச்சேரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். மேலும் 37 பேருக்கு தொற்று உறுதியானது.
37 பேருக்கு கொரோனா
புதுவை மாநிலத்தில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 982 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 37 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் புதுவையில் 29 பேரும், காரைக்காலில் 5 பேரும், ஏனாமில் 3 பேரும் ஆவர்.
இன்று 28 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 12 பேர், வீடுகளில் 302 பேர் என 314 பேர் தனிமைப் படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மூதாட்டி பலி
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த டி.என்.பாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,968 ஆக அதிகரித்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 3.77 சதவீதமாகவும், குணமடைவது 98.88 சதவீதமாகவும் உள்ளது. நேற்று கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 324 பேரும், 2-வது தவணையை 1,921 பேரும், பூஸ்டர் தடுப் பூசியை 5 ஆயிரத்து 825 பேரும் செலுத்திக்கொண்டனர்.