மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

சாணார்பட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஜெயலலிதா பிறந்த நாள்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நத்தம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். விழாவில் சாணார்பட்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் இன்பஜோதி சுப்பிரமணி, முன்னாள் துணைத்தலைவர் ஜெய்சிங், முன்னாள் ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் வி.சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் செல்வராஜ், கல்யாணசுந்தரம் மற்றும் இளம்வழுதி, ரமேஷ், விஜயன், ராஜேந்திரன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஏழைப் பெண் களுக்கு இலவச சேலைகளை நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன் வழங்கினார். தொடர்ந்து கோபால்பட்டி, சாணார்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இலவச சேலை

இதேபோன்று சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ராமராஜ் தலைமையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோபால்பட்டி, வேம்பார்பட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, கொசவபட்டி, அதிகாரிபட்டி, அய்யாபட்டி, கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சுமார் 1000 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் வீரசின்னம்பட்டி ஊராட்சி செயலாளர் சக்திமுருகன், மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகிகள் ஆரோக்கியம், தங்கவேல் மற்றும் காளியப்பன், கலைசெல்வம், செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரத்தில் நடந்த விழாவுக்கு முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான கே.பி.நல்லசாமி தலைமை தாங்கினார். பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஜெயலலிதா உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து 269 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டு, அம்பிளிக்கை தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஐ.ஆர்.சந்திரன், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் ஜெ.ஜமால்தீன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சுந்தரம், நகர கூட்டுறவு சங்க தலைவர் கஜேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சண்முகவேல் மற்றும் ஒன்றிய, நகர, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.