திண்டுக்கல்,
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் அலுவலகத்தில் நின்ற கார் தீப்பிடித்து சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு திருப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டி, செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் துரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி முன்னிலை வகித்தார். மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பழனியம்மாள், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதேபோன்று குஜிலியம்பாறை ஒன்றியம் பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.