மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி தட்டாஞ்சாவடி செந்தில் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுச்சேரி,

புதுவையில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்ததால் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக குண்டர் சட்டத்தின் கீழ் 7 ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் சார்பில் ரவுடிகளின் பெயர்களை பரிந்துரை செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவின்பேரில் குமரகுரு பள்ளத்தை சேர்ந்த மொந்த சங்கர், முத்தியால்பேட்டை சிவா என்கிற டிராக் சிவா, சன்னியாசிக்குப்பம் தொழிலதிபர் உதயகுமார் ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மட்டுமின்றி மேலும் பல ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தட்டாஞ்சாவடி செந்தில்

புதுவை தட்டாஞ்சாவடி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 36). பிரபல ரவுடியான இவர் மடுவுபேட் முரளி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். அவர் மீது கடந்த மாதம் புதுவை கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரை போலீசார் தமிழகம், கேரளா பகுதிகளில் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் நிலத்தை அபகரித்ததாக தட்டாஞ்சாவடி செந்தில் மீது கோரிமேடு போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செந்திலை கைது செய்ய புதுவை மாவட்ட கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

உத்தரவு நகல்

இதனை தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். தட்டாஞ்சாவடி செந்திலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவு நகலை அவரது வீட்டில் கோரிமேடு போலீசார் ஒட்டினர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் புதுவையில் ரவுடிகளின் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.