திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பரப்பலாறு அணை உள்ளது.
இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 86.52 அடியாக உள்ளது.
இதற்கிடையே பாசனத்திற்காக பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி நேற்று அணை பகுதியில் நடைபெற்றது.
இதில், அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, ஷட்டர் எந்திரத்தை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, ஒட்டன்சத்திரம் தாசில்தார் சசி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை 17 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதன்மூலம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாள்குளம், முத்துபூபாலசமுத்திரம், சடையகுளம், செங்குளம், ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய 6 குளங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2,323 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.