பெங்களூரு: டெல்லி குடியரசு தின விழாவில் நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினை பொருட்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட கர்நாடக அலங்கார ஊர்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
அலங்கார ஊர்தி
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. அதில் கர்நாடகத்தின் அலங்கார ஊர்தியும் இடம் பெற்று இருந்தது. இந்த ஊர்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ஊர்தி கர்நாடகத்தின் நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினை பொருட்களை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. கலாசார கைவினை பொருட்களின் தொட்டில் கர்நாடகம் என்ற பெயரில் இந்த அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டது.
அந்த அலங்கார ஊர்தியில் சந்தன மரக்கட்டைகளால் சிறு சிறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. முக்கியமாக மைசூருவின் ரோஸ்வுட் மரக்கட்டைகளால் அழகான பெரிய யானை உருவம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருந்தது. அதில் தந்தங்கள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு இருந்தன.
வெண்கல வண்ண சிலைகள், அரக்கில் உருவாக்கப்பட்ட சன்னபட்டணா பொம்மைகளும் அந்த ஊர்தியில் இடம் பெற்று இருந்தது. சுதந்திர போராட்ட வீரமங்கை கமலாதேவியின் பெரிய உருவம் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அவர் இந்தியாவின் கலாசார கைவினை பொருட்களின் தாய் என்றும் போற்றப்படுகிறார்.
புவிசார் குறியீடு
அந்த வீரமங்கை பாகினா பூஜை செய்வது போல் உருவம் வடிக்கப்பட்டு இருந்தது. அதில் சந்தன பெட்டி, மயில் வடிவிலான விளக்கு, பானைகள், பல்லாரி மாவட்டம் சண்டூரை சேர்ந்த வாழைப்பழ பைகள் போன்றவையும் இடம் பெற்று இருந்தன. மண்ணால் செய்யப்படும் குடுவைகளும் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த அலங்கார ஊர்தியில் 16 வகையான கைவினை பொருட்கள் இடம் பெற்று இருந்தன. இந்த 16 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த ஊர்தியில் கர்நாடக கடலோர மாவட்டங்களின் கலாசாரத்திற்கும் இடம் அளிக்கப்பட்டது. அதாவது அங்கு புகழ் பெற்ற யக்ஷகான வடிவங்களும் உருவாக்கப்பட்டு இருந்தன. பூத ஆராதனையில் பயன்படுத்தப்படும் வெண்கல முக கவசங்கள் அதில் செதுக்கப்பட்டிருந்தன. அந்த அலங்கார ஊர்தி கலை இயக்குநர் சசிதர் ஆதபா தலைமையில் 100 கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது.
இசையமைப்பாளர் பிரவீண்ராவ், நாட்டுப்புற கலை, கைவினை பொருட்கள் குறித்த ஒரு நிமிட பாடலை உருவாக்கினார். இந்த பாடலை இசைத்தபடி கர்நாடக அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின விழாவில் அழகுற பவனி வந்தது. அந்த அலங்கார ஊர்தி முன்பு யக்ஷகானா கலைஞர்கள் நடனமாடியபடி வந்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.