ஆன்மிகம்

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா.. நிகழ்ச்சி விவரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

குலசை தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசை யாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

நிகழ்ச்சி விவரம்

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நடைபெறும்.

நாளை மறுநாள் அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடக்க இருக்கிறது. காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படும். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கும். தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொள்வார்கள். காப்பு அணிந்த பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

முதலாம் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாள் இரவில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சூரசம்ஹாரம்

10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். 11-ம் திருநாளான 3-ந் தேதி மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12-ம் திருநாளான 4-ந்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறும்.  

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை