தலையங்கம்

விமான பயணம் பாதுகாப்பானது

ஜீரோ விபத்து உள்ள பயணமாக்க வேண்டுமென்றால் விமான விபத்துகளுக்கான காரணத்தை இன்னும் ஆழமாக ஆய்வு செய்து அதையும் போக்கிவிட்டால்.

தினத்தந்தி

விரைவான பயணத்துக்கு மக்கள் நாடுவது விமானப் பயணத்தைத்தான். முன்பெல்லாம் வசதி மிகுந்தவர்கள் மட்டுமே பயணம் செய்து வந்த விமான பயணம் இப்போது உதான் சேவைக்கு பிறகு குறைந்த கட்டணத்தில் ஆத்திர அவசரத்துக்கு எல்லோரும் பயணம் செய்ய முடியும் என்பதால் நடுத்தர மக்களும் ஏன் ஏழை மக்களும் விமானத்தில் பயணம் செய்ய தொடங்கி விட்டார்கள். சமீபத்தில் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்தும் இதேரகத்திலான 66 விமானங்கள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களுக்கு விமானத்தில் பயணம் செய்வதில் சற்று தயக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆமதாபாத் விமான விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் விசாரணை முடிவுகள் வரவில்லை. விமானியின் தவறா?, பறவைகள் கூட்டம் இரு எந்திரங்களுக்குள்ளும் சிக்கியதா?, எரிபொருளில் கோளாறா? அல்லது விமான எந்திரங்களில்தான் கோளாறா? என்பது இன்னும் தெரியவில்லை. பொதுவாக விமான நிலையத்தை சுற்றிலும் புல் வெளிகள் இருந்தால் பூச்சிகள் இருக்கும், அந்த பூச்சிகளை கொத்தி தின்பதற்காக பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். மேலும் இந்த விபத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மீது விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமான நிலையத்தின் இவ்வளவு அருகில் 6 மாடி கட்டிடம் கட்ட எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இவை அனைத்தும் குறிப்பிட்ட இந்த ஒரு விமான விபத்தைப்பற்றியே சுற்றி சுற்றி வரும் கருத்துகளாகும். ஆனால் சாலைப்போக்குவரத்தை விட ரெயில் போக்குவரத்தை விட விமான பயணமே பாதுகாப்பானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2023-ல் 10 லட்சம் விமான பயணத்தில் ஜீரோ விபத்துகளே, அதாவது ஒரு விபத்தும் நடக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டில் 10 லட்சம் பயணங்களுக்கு 0.87 விபத்துகளே நடந்துள்ளன. இவ்வளவு ஏன் 1947-ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்தியாவில் பயணிகள் விமானத்தை பொறுத்தமட்டில் 52 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 2,173 பேர் பலியாகியுள்ளனர். இந்த மொத்த விபத்துகளில் 80 சதவீத விபத்துகள் 1951 முதல் 2010 வரை விமானிகளின் தவறுகளாலேயே நடந்துள்ளது. ஆமதாபாத் விமான விபத்துக்கு முன்னால் கடந்த சில ஆண்டுகளில் இரு பெரிய விபத்துகள் நடந்துள்ளன. 2010-ல் மங்களூருவிலும், 2020-ல் கோழிக்கோட்டிலும் நடந்த விமான விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் மறுபக்கம் சாலை விபத்துகளைப் பார்த்தால் 2023-ல் மட்டும் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சராசரியாக ஒரு நாளைக்கு 474 பேர் தங்கள் இன்னுயிரை சாலை விபத்துகளில் இழந்துள்ளனர். பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் விபத்து பெரும்பாலான உயிர்களை பறித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ரெயில் விபத்துகளும் பல உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இவையெல்லாம் கூறி விமான விபத்துகளை நியாயப்படுத்தவில்லையென்றாலும் ஆபத்து குறைந்த விமான போக்குவரத்தை ஜீரோ விபத்து உள்ள பயணமாக்க வேண்டுமென்றால் விமான விபத்துகளுக்கான காரணத்தை இன்னும் ஆழமாக ஆய்வு செய்து அதையும் போக்கிவிட்டால், "ஆபத்தில்லாத பயணம் விமான பயணம், விபத்தில்லாத பயணம் விமான பயணம்" என்ற நிலையை அடைந்துவிடலாம்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை