தலையங்கம்

விலைவாசி உயர்வால் தடுமாறும் அமெரிக்கா

பல முன்னணி பத்திரிகைகள் பொருளாதார வீழ்ச்சிக்கு டிரம்ப் சட்டவிரோதமாக, முறையாக திட்டமிடாமல் தொடுத்த தேவையற்ற ஈரான் போர்தான் என்று விமர்சித்துள்ளன.

“சுடு தண்ணீரில் கைவிட்டுவிட்டு வேகமாக கையை வெளியே எடுத்து ஆ! சுட்டுவிட்டதே" என்று சொல்லி கையை உதறுவதுபோல இருக்கிறது அமெரிக்காவின் நிலை. அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய கச்சா எண்ணெய். எல்.பி.ஜி.. உரம் போன்ற பல பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்கள் அப்படியே நடுக்கடலில் ஆங்காங்கே நிற்கின்றன. இதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் பல நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த போர் காரணமாக உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறது என்று சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது. சர்வதேச நிதி அமைப்பு உலகளாவிய பொருளாதார கண்ணோட்டத்தை 'ஈரான் போர் இருளடைய வைத்துவிட்டது' என்ற தலைப்பில் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசி, வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற பல பாதகமான நிலைகளை எடுத்துக்கூறி பொருளாதார வீழ்ச்சி வருவதற்கான அறிகுறிகளை எடுத்துக்கூறியுள்ளது. சர்வதேச நிதி அமைப்பின் பெரிய பங்குதாரர் அமெரிக்கா என்ற வகையில் அந்த நாட்டு ஜனாதிபதி டிரம்ப்தான் இதற்கான காரணம் என்பதை நேரடியாக கூறுவதை தவிர்த்துவிட்டது. என்றாலும், உலகில் உள்ள பல முன்னணி பத்திரிகைகள் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு டிரம்ப் சட்டவிரோதமாக, முறையாக திட்டமிடாமல் தொடுத்த தேவையற்ற ஈரான் போர்தான் என்று விமர்சித்துள்ளன. இதுமட்டுமல்லாமல், சர்வதேச நிதியம் இந்த போரினால் தொழில் வளர்ச்சியில் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்ட பல நாடுகளை பட்டியலிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் இப்போது மிக கடுமையான வீழ்ச்சிக் குள்ளாகிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளையே கச்சா எண்ணெய்க்கும். கியாசுக்கும் மற்றும் பல மூலப் பொருட்களுக்கும் சார்ந்து இருக்கும் கிழக்கு ஆசிய நாடுகளெல்லாம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலைக்கு ஒட்டுமொத்த காரணமாக இருக்கும்அமெரிக்காவும் இத்தகைய பாதிப்புகளில் இருந்து தப்ப வில்லை. ராணுவ செலவு அதிகரித்துவிட்டதால் அமெரிக்காவின் நிதி நிலையும் தள்ளாடுகிறது. அமெரிக்காவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டதால் அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விலை ராக்கெட் வேகத்தில் சென்று விண்ணை தொட்டுவிட்டது.

வெண்டைக்காய் விலை கூட இருமடங்கு உயர்ந்துவிட்டது என்று அங்குள்ள இல்லத்தரசிகள் கூறுகிறார்கள். எரிபொருள் விலை கடந்த ஆண்டைவிட 12.5 சதவீதம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக கியாஸ் விலை 19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஒரு கேலன் கியாஸ் (சுமார் 3.7 லிட்டர்) 4.18 டாலருக்கு மேல் போய்விட்டது. பெட்ரோல்-டீசல் போன்ற எரிபொருள் விலை 44 சதவீதம் எகிறிவிட்டது. ஆடைகள் விலை 3.4 சதவீதமும், போக்குவரத்து செலவு. வீட்டு வாடகை என்று ஒரு செலவும் பாக்கியில்லாமல் எல்லா செலவுகளுமே கையை மீறி சென்றுவிட்டது. மொத்தத்தில் அமெரிக்காவில் அனைவரின் 'பர்ஸ்'களையும் விலைவாசி உயர்வு பதம் பார்த்துவிட்டது. அதனால்தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இப்போது ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்ற நிலைப்பாட்டில் போரை நிறுத்த காரணம் தேடிக்கொண்டு இருக்கிறார்.