அமெரிக்காவை நிர்மாணித்தவர்களில் ஒருவரும், 1801 முதல் 1809 வரை 3-வது ஜனாதிபதியாக இருந்த வருமான தாமஸ் ஜெபர்சன் கூறிய பல தத்துவங்கள், இன்றும் உலகுக்கே வழிகாட்டும் வகையில் இருக்கின்றன. அவர், “ஒரு நல்ல அரசாங்கத்தின் முதல் மற்றும் ஒரே குறிக்கோள் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் மகிழ்ச்சியையும் மையமாக வைத்து கவனிப்பதாக இருக்கவேண்டுமே தவிர, அவர்களின் அழிவில் இருக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார். மத்திய-மாநில அரசுகள் பல திட்டங்களை நிறைவேற்றுகிறது.
“தினத்தந்தி”யில் அதைப் பற்றிய செய்திகளை மட்டும் பிரசுரித்து விட்டு, அதோடு நிறுத்தி கொள்வதில்லை. மாறாக அதைப்பற்றி சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக இல்லத்தரசிகள், கடைக்கோடி மக்கள் என்ன கருதுகிறார்கள்? அவர்களுக்கு அதனால் என்ன பயன்? அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கிறதா? அவர்களுக்கு இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறதா? என்று அனைத்து தரப்பினரிடமும் பேட்டி எடுத்து பிரசுரிப்பது வழக்கம்.
அதேபோன்ற ஒரு முயற்சியை இப்போது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழகம், பெண்கள் நலனுக்காக நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியோடு தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் ஆகியவை மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் சென்றடைந்து இருக்கிறதா? என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்துகிறது.
‘உங்க கனவ சொல்லுங்க’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் அடிப்படையிலான ஆய்வு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் நடத்தப்படாமல், தமிழ்நாட்டில் உள்ள 1 கோடியே 90 லட்சத்து 98 ஆயிரத்து 746 வீடுகளுக்கும் நேரடியாக சென்று நடத்தப்படுகிறது. இந்த பணிகளை தமிழ்நாட்டில் உள்ள 55,706 மகளிர் சுய உதவிக்குழுவினர் 12 நாட்கள் மேற்கொள்கின்றனர். இதில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 ஊதியமாக வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 30 வீடுகளுக்கு அவர்கள் செல்கிறார்கள்.
வீடுகளில் உள்ளவர்களிடம் என்னென்ன கேள்விகளை கேட்கவேண்டும்? எத்தகைய விவரங்களை பெறவேண்டும்? என்பது குறித்து 252 பயிற்சியாளர்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். 17,378 பேர் மேற்பார்வையிடும் வகையில் சூப்பர்வைசர்களாக இருக்கிறார்கள். முதல்-அமைச்சரின் முகவரி துறை, இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறது.
வீடு, வீடாக வந்து கள ஆய்வு மேற்கொள்ளும் மகளிர் சுய உதவிக் குழுவினர், ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து அரசின் பல்வேறு திட்டங்களை அவர்களிடம் சொல்லி, அந்த திட்டங்கள் பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரிந்து இருக்கிறதா? அந்த திட்டங்கள் அவர்களை சென்றடைந்து இருக்கிறதா? அதன் பலனை அவர்கள் அடைந்து இருக்கிறார்களா? அதன் தாக்கம் என்ன? எந்த அளவு அவர்கள் வாழ்வில் அந்த திட்டங்கள் ஊடுருவி இருக்கின்றன? ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்பன தொடர்பான கேள்விகளை கேட்டு பதில் பெற்றுவருகின்றனர்.
இந்த திட்டத்துக்காக மொத்தம் ரூ.59 கோடியே 5 லட்சத்து 86 ஆயிரத்து 597 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டம். அரசின் திட்டங்கள் மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று தெரியாமல் அதை செயல்படுத்தி என்ன பயன்? அதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். நிறை இருந்தால் அதை தொடரவும், குறை இருந்தால் திருத்திக்கொள்ளவும் முடியும் என்ற வகையில் இது தொடர்ச்சியான திட்டமாக இருக்கவேண்டும்.