தலையங்கம்

தீர விசாரிக்காமல் கைது செய்வதா?

ஒரு பொய் புகார் ஒரு அப்பாவி உயிரையே பறித்துவிட்டது.

சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில், போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்த இளைஞர் ஒருவரின் கொலை வழக்கு விசாரணையின்போது சி.பி.ஐ. தெரிவித்த ஒரு தகவல் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கி விட்டது. இப்படியும் நாட்டில் நடக்குமா? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலுக்கு பேராசிரியை நிகிதா என்பவரும், அவருடைய தாயார் சிவகாமியும் காரில் சென்று இருந்தனர்.

இவர்களது காரை அங்கு பார்க்கிங் செய்த விவகாரம் தொடர்பாக பணியில் இருந்த தனியார் பாதுகாவலரான அஜித்குமாருக்கும், நிகிதாவுக்கும் சச்சரவு ஏற்பட்டது. காலையில் இந்த சம்பவம் நடந்த நிலையில் மாலையில் நிகிதா திருப்புவனம் போலீஸ் நிலையத்துக்கு சென்று காரில் வைத்து இருந்த தன்னுடைய 10 பவுன் தங்கநகை திருட்டு போய் விட்டது. அதற்கு அஜித்குமார்தான் காரணம் என்றும் புகார் கொடுத்தார்.

என்ன காரணமோ? தெரியவில்லை. போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அஜித்குமாரை பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் இரும்புக்கம்பியால் மிருகத்தனமாக தாக்கினர். அதில் அஜித்குமார் உயிரிழந்தார். போலீசாரின் இந்த கொடூர செயலை, அஜித்குமாரின் நண்பர் ஒருவர் மறைந்து இருந்து வீடியோ எடுத்ததால் அது வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விட்டது. தமிழக அரசு, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இதுதொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. மேலும் 4 அதிகாரிகளுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று கூறி அவர்களையும் குற்றவாளிகளாக சேர்த்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது சி.பி.ஐ.யின் மிக திறமையான புலன்விசாரணையால் ஒளிந்து இருந்த ஒரு பெரிய உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது. கடந்த 4-ந் தேதி இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நடந்தபோது சி.பி.ஐ. புகாரில் நிகிதா கூறியபடி நகை எதுவும் திருட்டு போகவில்லை, அந்த புகாரில் உண்மை இல்லை என ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது.

ஒரு பொய் புகார் ஒரு அப்பாவி உயிரையே பறித்துவிட்டது. இதை மட்டும் போலீசார் தீவிர விசாரணை செய்திருந்தால் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்திருக்காது. இந்த சூழ்நிலையில் போலீசார் கைது செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு பாடத்தை தந்துள்ளது. ஒருவரை கைது செய்யும் முன்பு போலீசார் இந்த கைது நடவடிக்கை தேவையா?, ஏன் அவரை கைது செய்ய வேண்டும்? என்று பலமுறை தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

சட்டம் ஒருவரை கைது செய்ய அனுமதி கொடுத்து இருக்கிறது என்பதற்காகவே யாரையும் கைது செய்யலாம் என்பது பொருளல்ல. கட்டாய அவசியம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும். தேவையற்ற கைது என்பது சட்ட விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த உத்தரவை, காவல்துறை அனைத்து அதிகாரிகள், போலீஸ்காரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதை மட்டும் முன்பே நடைமுறைப்படுத்தியிருந்தால் அஜித்குமார் கொலை மட்டுமல்ல, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் சித்ரவதை மரணமும் மட்டுமல்லாமல் பல லாக்-அப் மரணங்களும் நடந்து இருக்காது.