மகாகவி பாரதியார் பெண்கள் விடுதலையில் அதிக அக்கறை கொண்டு கவிதைகள் வடித்துள்ளார். அவர் காலத்தில் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற தத்துவம்தான் தலையெடுத்தது. அந்த நேரத்தில்தான் அவர், 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி' என பாடினார். அவர் கண்ட கனவு பெண் கல்வி விஷயத்தில் தமிழ்நாட்டில் நிறைவேறிவிட்டது.
பள்ளி, உயர்கல்வி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் மாணவிகளின் எண்ணிக்கையே உயர்ந்திருக்கிறது. ஆனால் சட்டங்களை இயற்றும் சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. இதற்கு அரசியல் கட்சிகள் பெண்களுக்கு போட்டியிட அதிக இடங்களை கொடுக்காததே காரணம்.
எடுத்துக்காட்டாக நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் உள்ள 543 எம்.பி.க்களில் பெண்களின் எண்ணிக்கை 74 தான். இது 13.6 சதவீதம். தமிழ்நாடு சட்டசபையிலும் மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் பெண்களின் எண்ணிக்கை 12 தான். இது வெறும் 5.1 சதவீதம். இதில் தமிழ்நாடு ஒருவகையில் முன்னோடியாக இருக்கிறது என்றால், அது உள்ளாட்சி அமைப்புகளில்தான்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சட்டத்தை இயற்றும் அதிகாரம் கிடையாது. எனவே சர்வ வல்லமை படைத்த சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும், முயற்சியும் பல ஆண்டுகளாக இருந்தாலும் அது மோடி ஆட்சியில் கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேறியது. இப்போது சட்டம் கையில் இருந்தாலும் உடனடியாக அதை நிறைவேற்றமுடியாத நிலை இருக்கிறது.
காரணம், இந்த சட்டத்தின்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு, அதன்பிறகுதான் இந்த சட்டத்தை நிறைவேற்றமுடியும். இப்போதுள்ள கால அட்டவணைப்படி இந்த பணி 2030-க்கு பிறகுதான் முடியும். ஆனால் மத்திய அரசு 2029 நாடாளுமன்ற தேர்தலிலேயே பெண்கள் ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தவும், அதற்கு முன்பாக 2011-ம் ஆண்டின்
கணக்கெடுப்புப்படியே தொகுதி வரையறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக 2 அரசியல் சட்ட திருத்தங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த திருத்தங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவும், பெரும்பான்மையான மாநில சட்டசபைகளின் ஆதரவும் வேண்டும்.
இந்த திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பா.ஜனதா கோர இருக்கிறது. தொகுதி வரையறை முடிக்கப்பட்டு இந்த திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-ல் இருந்து 816 ஆக உயரும். அப்போது அதில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 273 ஆக இருக்கும். இதுபோல ஆதிதிராவிடருக்கான இடம் 84-ல் இருந்து 126 ஆகவும், பழங்குடியினருக்கான இடம் 47-ல் இருந்து 70 ஆகவும் உயரும். இதனால் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையும் உயரும் என்றாலும், அவர்கள் கணக்கிட்டுள்ள விகிதாசாரத்தின்படி தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் உத்தரபிரதேச எம்.பி.க்களின் எண்ணிக்கை 80-ல் இருந்து 120 ஆக உயரும். இந்த 2 திருத்தங்களினால் சில குறைகள் இருந்தாலும், நாடாளுமன்றங்களிலும், சட்டசபைகளிலும் 2029-க்கு பிறகு பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதில் மகிழ்ச்சியே.