தலையங்கம்

சென்னையில் கட்டப்பட்ட மிதக்கும் வகுப்பறைகள்

இந்திய கடற்படையில் ஏறத்தாழ 75,000 வீரர்கள், அதிகாரிகள் பணியில் இருக்கிறார்கள்.

இந்தியா 11,098.81 கிலோமீட்டர் நீளகடற்கரையைக் கொண்ட அழகிய நாடாகும். நமது நாட்டில் 1,298 தீவுகள் மற்றும் மணல் திட்டுகள் இருக்கின்றன. குஜராத்துக்கு அடுத்ததாக தமிழ்நாடு 1,068.89 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையை கொண்டிருக்கிறது. இந்திய எல்லைக்குள் மேற்கு மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளையும், தீவுகள் மற்றும் மணல் திட்டுகளையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இந்திய கடற்படைக்கு இருக்கிறது. கடல் மார்க்கமாக எதிரிகள் ஊடுருவதை தடுக்க ரோந்து சுற்றி வந்து கண்காணித்தல், கடத்தலை தடுப்பது, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது, கடல் வளத்தை பாதுகாப்பது கடற்படையின் கடமையாகும்.

வலிமைமிக்க இந்திய கடற்படையில் ஏறத்தாழ 75,000 வீரர்கள், அதிகாரிகள் பணியில் இருக்கிறார்கள். 170 முதல் 200 வரையிலான கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கின்றன. இதுபோல கடற்படைக்கு சொந்தமாக 300-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்களும் வலம் வருகின்றன. கடற்படையில் தங்கள் வீரதீர செயலை செய்யும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் தங்கள் பங்களிப்பை நல்குகிறார்கள். இவர்களுக்கெல்லாம் அளிக்கும் பயிற்சிகள் மிக நவீனமானவை. கடற்படையில் முத்திரை பதிக்கும் வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிப்பதற்காக மிதக்கும் வகுப்பறைகளாக செயல்படும் வகையில் 3 பயிற்சி கப்பல்களை கட்டும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது. அதில் முதல் கப்பல் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். இந்த கப்பலின் பெயர் ஐ.என்.எஸ். கிருஷ்ணா. சமீபத்தில் இது கடலில் பயணம் மேற்கொண்டது.

இந்த ஆண்டு இறுதியில் தன் பணியை தொடங்க இருக்கிறது. 60 நாட்கள் தொடர்ச்சியாக கடலுக்குள் இருக்கும் திறன் கொண்ட இந்த கப்பல், அலைகளை தழுவி 20 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது.

வழக்கமாக கடற்படை வீரர்களுக்கு பெரும்பாலான பயிற்சிகள் கடற்கரையில் உள்ள நிலப்பரப்பில்தான் அளிக்கப்படும். குறிப்பிட்ட சில பயிற்சிகள்தான் நடுக்கடலில் கப்பல்களில் வைத்து நடக்கும். ஆனால் இனி இதற்காகவே வடிவமைக்கப்படும் இந்த 3 கப்பல்களிலும் பயிற்சிகள் நடக்கும்.

ஐ.என்.எஸ்.கிருஷ்ணா பயிற்சி கப்பலில் 20 அதிகாரிகள், 150 கடற்படை வீரர்கள், 200 பயிற்சியாளர்கள் ஒரேநேரத்தில் பயணிக்கமுடியும். 3 வகுப்பறைகள் மட்டுமல்லாமல் சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன.

ஒரு வகுப்பறையில் 70 வீரர்களுக்கு பாடம் நடத்தமுடியும். இந்த கப்பலில் வீரர்கள், அதிகாரிகளுக்கு கடற்படை தொடர்பாக முழுமையான பயிற்சியளிக்கப்படும்.

இந்திய வீரர்களுக்கு மட்டுமல்லாமல் நட்பு நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்காக மட்டுமல்லாமல் இந்த கப்பல் மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு பணிகளுக்கும் கடலில் சீறிப் பாய இருக்கிறது. கிருஷ்ண பகவான் போர்க்கலையில் எப்படி வல்லவராக திகழ்ந்தாரோ, அதுபோல ஐ.என்.எஸ்.கிருஷ்ணா பயிற்சி கப்பலும் நமது கடற்படைக்கு வலிமைமிக்க மிடுக்கான வெள்ளுடை வீரர்களையும், அதிகாரிகளையும் உருவாக்கப்போகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவுக்கு சேவையாற்றப்போகும் இந்த கப்பல் நீலக்கடலில் ராஜாவாக எப்போதும் கொடி கட்டி பறக்கும். கிருஷ்ண பகவான் தேரோட்டியாக இருந்து வியூகம் வகுத்து கொடுத்ததுபோல, இந்த கப்பலும் நமது வீரர்களுக்கு தேரோட்டியாக மட்டுமல்லாமல் வியூகம் வகுத்து கொடுக்கக்கூடியதாகவும் திகழப்போகிறது.