போதைப்பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்கவேண்டும் என்ற உணர்வு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதற்கு கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் எழுதிய குறட்பாக்களே சாட்சி. ஆக பண்டையகாலத்தில் இருந்தே மதுப்பழக்கம் பிரச்சினையாகவே கூறப்பட்டுவருகிறது. 'டாஸ்மாக்' கடைகள் அனைத்தையும் மூடினால் அடுத்த நொடியே கள்ளச்சாராயமும், அண்டை மாநிலங்களில் இருந்து மது கடத்தலும் தலை விரித்தாடிவிடும். இதுமட்டுமல்லாமல் போதைப்பொருட்கள் புழக்கமும் அதிகரித்துவிடும்.
'டாஸ்மாக்' கடைகளுக்கு இடையேயான தூரத்தை அதிகப்படுத்தினால் மதுபானங்கள் வாங்க சிலர் தயக்கம் காட்டுவார்கள். பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், பஸ் நிலையங்கள் அருகே 'டாஸ்மாக்' கடைகள் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக வலுவாக இருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும்நிலை ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டதோடு, மது குடித்துவிட்டு வரும் குடிவெறியர்களால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் பல இடங்களில் இருந்தது.
இதுமட்டுமல்லாமல் வழிபாட்டுத்தலங்கள் அருகேஉள்ள கடைகளால் இறை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களுக்கும், பஸ் நிலையங்கள் அருகே உள்ள கடைகளால் வெளியூர் பயணம் செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்களுக்கும் பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுவந்தது.
இந்த இன்னல்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆராய்ந்து தனது கட்சி தேர்தல் அறிக்கையில், 'மது அருந்துவதை குறைக்க சீரான, படிப்படியான அணுகுமுறையை தமிழக வெற்றிக் கழக அரசு பின்பற்றும். மது கிடைப்பதை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் குறைத்தல், அதுபோல கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் அமைந்துள்ள 'டாஸ்மாக்' கடைகள் உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பான சூழல் நிலை நாட்டப்படும் 'என்று வாக்குறுதிஅளித்தார்.
சொன்னதை நிறைவேற்றும் வகையில் கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சராக பதவியேற்ற விஜய், அடுத்த 2 நாட்களுக்குள் எந்தெந்த 'டாஸ்மாக்' கடைகள் இவ்வாறு 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது என்ற பட்டியலை எடுத்து 12-ந்தேதியன்று வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கும் 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பஸ் நிலையங்கள் அருகில் உள்ள 255 கடைகள் என மொத்தம் 717 'டாஸ்மாக்' கடைகளை அடுத்த 2 வாரங்களுக்குள் மூடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 4,765 கடைகளில் தற்போது 717 கடைகள் மூடப்பட உள்ளது. இந்த உத்தரவு வந்த சில மணி நேரங்களிலேயே கடைகளை மூடும்படலம் தொடங்கிவிட்டது. இதனால் 3,500 ஊழியர்கள் வேலை இழப்பார்கள்.
அவர்களுக்கு அரசின் காலி பணியிடங்களில் மாற்று வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் டி.தனசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையும் நியாயமானதுதான்.
பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், பஸ் நிலையங்களின் அருகில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்பது விதி. அந்த விதி இவ்வளவு நாட்கள் பின்பற்றப்படவில்லையே என்று மக்கள் பட்ட ஆதங்கத்துக்கு, இப்போது சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நிச்சயமாக மீண்டும் கொண்டுவரமுடியாது.
'டாஸ்மாக்' மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.50 ஆயிரம் கோடியை இழந்து நிர்வாகத்தை நடத்தவும்முடியாது. இந்த பழக்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை போக்க இதுபோன்ற அரசின் முயற்சிகள் துணைநிற்கும். தேர்தல் அறிக்கையில் சொன்னதை மின்னல் வேகத்தில் நிறைவேற்றியிருப்பது பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் முதல்-அமைச்சர் விஜய்க்கு பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது.