தலையங்கம்

ரெயில்வே டிக்கெட் ரத்தில் சலுகை இல்லையா?

இதை ரெயில்வே பத்திரிகை குறிப்பாக வெளியிடவில்லை.

சொகுசானது, மலிவானது, விரைவாக செல்லக்கூடியது, தூங்கிக்கொண்டே பயணம் செய்யலாம், பயணத்தின்போது உடைமைகளை எடுத்து செல்லும் வசதி, கழிவறை வசதி போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்களின் பிரதான தேர்வு ரெயில் பயணமாக இருக்கிறது.

60 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து ரெயிலில் பயணம் செய்யமுடியும். தவிர்க்கமுடியாத காரணங்களால் பயணத்தை ரத்து செய்யவோ, தள்ளிப்போடவோ நேர்ந்தால் டிக்கெட் கட்டணத்தில் குறைவான தொகையை மட்டும் கழித்துவிட்டு மீதி தொகையை பயணிகள் திரும்பப்பெறும் வசதி இருந்தது. ஆனால் நாளை (புதன்கிழமை) முதல் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை ரெயில்வே பத்திரிகை குறிப்பாக வெளியிடவில்லை. 2006-ம் ஆண்டுக்கான ரெயில்வே சீர்திருத்த குறிப்பாக மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்து இருக்கிறார்.

வழக்கமாக மந்திரிகள் சலுகைகளைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் இப்போதுதான் சலுகையை கடுமையாக்கும் கசப்பான அறிவிப்புகளை ரெயில்வே மந்திரி வெளியிட்டிருக்கிறார். இதன்படி, ரெயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு அதாவது 3 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே குறைவான தொகையை கழித்துவிட்டு, மீதம் உள்ள தொகையை திரும்பப்பெற முடியும். 24 மணி நேரத்தில் இருந்து அதாவது ஒரு நாளில் இருந்து 3 நாட்களுக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் 25 சதவீத கட்டண தொகையை கழித்துவிட்டு மீதி தொகையை மட்டுமே பெறமுடியும். 8 மணியில் இருந்து 24 மணி நேர இடைவெளிக்குள் ரத்து செய்தால் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் கழிக்கப்படும். அடுத்து பேரிடியாக ரெயில் கிளம்புவதற்கு 8 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் முழுத்தொகையும் பறிபோய்விடும்.

இதற்கு முன்பு இதுபோல டிக்கெட்டை ரத்து செய்தால் கழிவு கட்டணம் குறைவாக இருந்தது. இதுவரை ரெயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்புவரை டிக்கெட்டை ரத்து செய்தால் 25 சதவீத கட்டணத்தை மட்டும் பிடித்தம் செய்யும் நடைமுறை இருக்கிறது. 4 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்கு முன்புவரை ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது.

ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்புவரை டிக்கெட்டை ரத்து செய்து 50 சதவீத கட்டணத்தையாவது திரும்பப்பெறும்வசதி இருந்தது. போக்குவரத்து நெரிசல், வேறு அவசர காரணங்களால் ரெயிலை பிடிக்கமுடியவில்லை என்றால் 500 கிலோ மீட்டர் வரையிலான பயணத்துக்கு 5 மணி நேரத்துக்குள் 50 சதவீத தொகையை பெற முடிந்தது.

இதுபோல 1,000 கிலோ மீட்டர் பயணம் என்றால் 12 மணி நேரத்தில் 50 சதவீத கட்டணத்தை பெறமுடிந்தது. நாளை முதல் கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி என்பது போல ஏற்கனவே கொடுத்த சலுகைகள் பறிக்கப்பட்டுவிட்டன. கன்பார்ம் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கு பின்னர் இருக்கை ஒதுக்கீட்டுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அந்த இடம் தானாகவே ஒதுக்கப்பட்டுவிடும். இதனால் ரெயில்வேக்கு எந்த வருவாய் இழப்பும் ஏற்படாத நிலையில், டிக்கெட் ரத்துக்கான கட்டண சுமையை பயணிகள் எதற்காக சுமக்கவேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே புதிய உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது ரெயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.