ஆண்டாண்டு காலமாக நாடாளுமன்றத்தில் பொதுபட்ஜெட் தனியாகவும், ரெயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு ரெயில்வேக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கைவிடப்பட்டது. 2017 முதல் ரெயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. ரெயிவேக்கென தனிபட்ஜெட் வேண்டும் என்ற கோரிக்கை இப்போதும் இருந்து வருகிறது. தனி பட்ஜெட்டாக இருந்தால்தான் மாநிலங்களில் உள்ள கோரிக்கைகளை எம்.பி.க்கள் விரிவாக எடுத்துரைத்து, ரெயில்வே மந்திரியின் பதிலை பெறமுடியும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான ரெயில்வே திட்டங்கள் இதுவரை நிறைய நிறைவேற்றியிருப்பதாக மத்திய அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில்கூட, 'காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ரெயில்வே திட்டங்களுக்காக 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு மட்டும் அதனைவிட 9 மடங்கு அதிகமாக அதாவது, ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பெருமைபட கூறினார். பொதுவாக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது ஆண்டுக்கு ஆண்டு ஒதுக்கீடு தொகை அதிகரிப்பது என்பது வழக்கமான நடைமுறைதான்.
அந்தவகையில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பெரிய சாதனையல்ல. எவ்வளவு திட்டங்கள் அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதில்தான் உயர்வு உள்ளது. பொருளாதார ரீதியாக இந்தியாவிலேயே மராட்டியத்துக்கு அடுத்தாற்போல 2-வது இடத்தில் தமிழ்நாடுதான் இருக்கிறது. மற்ற வளர்ச்சிகளிலும் தமிழ்நாடு முன்வரிசையில் உள்ளது. ரெயில்வே திட்டங்களுக்கான திட்ட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் மராட்டியத்துக்கு இந்தியாவிலேயே அதிகமாக ரூ.23,926 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மராட்டியத்துக்கு ஒதுக்கிய தொகையைவிட 3 மடங்கு குறைவாகவே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அண்டைமாநிலமான ஆந்திராவுக்குகூட ரூ.10,134 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டைவிட சற்று கூடுதலாக நிதி கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டுக்கான ரெயில்வே திட்ட ஒதுக்கீட்டையும், நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியையும் ஒப்பிட்டு பார்த்தால், "யானை பசிக்கு சோளப்பொறி போட்டது போல” இருக்கிறது. பல திட்டங்கள் ஆண்டாண்டு காலமாக போதிய நிதிஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு செல்லும் ரெயில்வே பாதை திட்டம் 2000-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டும் போதிய நிதி ஒதுக்கப்படாததால் இதுவரை 20 சதவீத பணிகளே முடிவடைந்துள்ளன. இதேபோல், மொரப்பூர்- தர்மபுரி, திருவண்ணாமலை- திண்டிவனம், சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் செல்லும் ரெயில்பாதை திட்டங்கள் நிறைவேறுமா? நிறைவேற்றப்படாதா? என்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
மேலும் 2006-ல் பரிந்துரைக்கப்பட்ட வடக்கையும், தெற்கையும் இணைக்கும் டெல்லி-தூத்துக்குடி சரக்கு வழித்தடத்துக்கு இன்றுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. ரெயில் விபத்துகளை தடுக்கும் "கவாச்" தொழிநுட்பம் தமிழ்நாட்டை இன்னும் எட்டிப்பார்க்கவில்லை. 'கிசான் ஸ்பெஷல்' என்ற விவசாயிகளுக்கான ரெயில் தமிழ்நாட்டில் கேள்விப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இப்படியாக கானல் நீராகிப்போன ரெயில்வே திட்டங்கள் தமிழ்நாட்டில் ஏராளம், ஏராளம்.